Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’பொதுக்குழுவை வெற்றிகரமாகக் கூட்டுவோம்’ - பன்னீர்செல்வம் திட்டவட்டம்

அ.தி.மு.க-வின் பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அ.தி.மு.க-வில் தனித்தனி அணிகளாக இருந்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள் இணைந்ததைத் தொடர்ந்து, வலுவான அணியாக உருவாகியுள்ளனர். இவர்களுக்கு எதிராக, டி.டி.வி.தினகரன் வரிந்துகட்டிக்கொண்டு செயல்பட்டுவருகிறார். 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிமீது நம்பிக்கை இல்லை' என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினர். 

அ.தி.மு.க அமைச்சர்கள்

அ.தி.மு.க-விலிருந்து சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை நீக்கிவிட்டு, கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் எடப்பாடி,ஓ,பி.எஸ் தரப்பினர் தீவிரம்  காட்டிவருகின்றனர். அதை முறியடிக்கும் முயற்சியில் தினகரன் அணியினர் ஈடுபட்டுவருகின்றனர். இதற்காக, ஆட்சியைக் கலைக்கவும் தயார் நிலையில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதனால், தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர், மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா, சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் நடந்தது. நெல்லை ஆட்சியர் சந்திப் நந்தூரி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி, பாஸ்கரன், மாஃபா.பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெய்தனர். மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மனோகரன், மாணிக்கம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அ.தி.மு.க அரசின் துணை முதல்வர்இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’ஆங்கிலேயருக்கு எதிராக முதல் சுதந்திரக் குரலை ஒலித்தவர், பூலித்தேவன். அவரது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்கிற கோரிக்கையை, அம்மா முதல்வராக இருக்கும்போது பல்வேறு அமைப்பினரும் முன்வைத்தார்கள். அதை ஏற்று, அவர் உத்தரவு பிறப்பித்ததால் இந்த விழா அரசு விழாவாக நடந்துவருகிறது. அரசின் சார்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டு மன்னர் பூலித்தேவனுக்கு மரியாதைசெலுத்திவருகிறார்கள். அதன்படி, இந்த ஆண்டு நானும் அமைச்சர்களும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளோம்’’ எனத் தெரிவித்தார். 

பின்னர் அவரிடம், ’வரும் 12-ம் தேதி கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவதாக அறிவித்திருக்கிறீர்களே..?’ எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘ஆம். கட்சியின் பொதுக்குழுவை எந்தத் தடையும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தி முடிப்போம்’ என்று உறுதிபடத் தெரிவித்தார். பின்னர், அமைச்சர்கள், கட்சியினருடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தினார். நெல்லை மாநகர மாவட்டச் செயலாளரான பாப்புலர் முத்தையா, விஜிலா சத்யானந்த் எம்.பி., ஆகியோர், தினகரன் ஆதரவாளர்களாக இருப்பதால், பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தினகரன் தரப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து ஓ.பி.எஸ் விரிவாக ஆலோசனை நடத்தியதாகக் கட்சியினர் தெரித்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement