Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

8 மணி நேரத்தில் 4 குழந்தைகள் மரணம்! - சேலத்தை கலங்கடிக்கும் மர்ம காய்ச்சல்

சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் நேற்று இரவு 10:00 மணி முதல் இன்று காலை 6:00 வரையிலான 8 மணி நேரத்தில், மர்ம காய்ச்சலால் தொடர்ந்து 4 குழந்தைகள் மரணம் அடைந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இதை ஆரம்பத்தில் மறுத்துவந்த மருத்துவமனை நிர்வாகம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புக் கொள்வதோடு 4 குழந்தைகளும் காய்ச்சலால் இறக்கவில்லை. வெவ்வேறு நோய்களால் இறந்ததாகக் கூறி வருவது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சேலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியின் 2 வயது மகன் தீபராஜ், சேலம் தாதகாப்பட்டி செல்லக்குட்டிகாட்டைச் சேர்ந்த ராஜேந்திரனின் 2 வயது மகன் பவன்குமார், மகுடஞ்சாவடியைச் சேர்ந்த செந்திலின் 5 வயது மகன் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி தியாகதுருவத்தைச் சேர்ந்த ஐயந்துரையின் 5 மாத மகள் ஷாஞ்சனா, இந்த 4 குழந்தைகளும் 8 மணி நேரத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து பறிதாபமாக இறந்துள்ளனர்.

இதுபற்றி மருத்துவமனையில் நோயாளிகளோடு இருக்கும் மக்கள் ''மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக இந்த மர்மக் காய்ச்சல் இருந்து வருகிறது. இதனால்  நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், முதியவர்கள் இறந்திருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போர்க்காலத்தில் செயல்பட வேண்டிய மாவட்ட சுகாதாரத் துறை தூங்கிக் கொண்டிருக்கிறது. மாவட்டம் முழுவதிலும் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் குவிகிறார்கள்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்கள் இல்லாததால் சிகிச்சை கொடுக்க முடியாமல் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. மக்களுக்கு யாரும் எந்த விழிப்பு உணர்வும் ஏற்படுத்தவில்லை. இந்த அரசியல்வாதிகள் பதவிக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர மக்களை கண்டுகொள்வதில்லை. இந்த மருத்துவமனையில் ஏராளமாக குழந்தைகளும், முதியவர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். ஆனால் டாக்டர்களோ, செவிலியர்களோ சரியாக வந்து பார்ப்பதில்லை'' என்றார்கள்.


இதுபற்றி அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையின் டீன் கனகராஜ், ''கார்த்திகேயன், ஷாஞ்சனா இரண்டு பேர் காய்ச்சலால் இறந்திருக்கிறார்கள். மற்ற இரண்டு பேர் இதயம், மூளை சம்மந்தப்பட்ட வேறு நோயால் இறந்திருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் காய்ச்சல் அதிகரித்துதான் இருக்கிறது. அதற்கு அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எங்களுடைய தாலுக்கா மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கிறோம். இருந்தாலும் பயந்துகொண்டு மக்கள் இங்கு வருகிறார்கள். சென்னையில் இருந்து மூன்று, நான்கு மருத்துவர்கள் இங்கு வந்து எங்களுக்கு உதவி செய்கிறார்கள். இருந்தபோதும் ஒரு நாளைக்கு 400, 500க்கும் மேற்பட்ட மக்கள் வருவதால் மருத்துவர்கள் பற்றாகுறையாக இருக்கிறது. இருந்தாலும் சிறப்பாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement