வெளியிடப்பட்ட நேரம்: 00:15 (02/09/2017)

கடைசி தொடர்பு:00:15 (02/09/2017)

குருப்பெயர்ச்சி: சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்

குருபகவானைத் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களில் முக்கியமான ஒரு தலம் சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம். அதைப்பற்றி காண்போம்.

நஞ்சுண்டேஸ்வரர்

ஈசனே குருவாக அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்ததால் தென்திசை கடவுளாக, ஆலமர்செல்வனாக, விரிசடை வேந்தனாகச் சிறப்பிக்கப்படுகிறார். மெளனமாக அமர்ந்து முத்திரைகளின் மூலமே தனது உபதேசங்களை அளித்து அருள்  செய்தார். இதனால் தட்சிணா மூர்த்தி என்ற வடிவில் சிவன் ஆலயங்களில் இவர் தனித்து வழிபடப்படுகிறார். சிவன் மூர்த்தங்களில் தட்சிணா மூர்த்தி சிறப்பாக வணங்கப்படுகிறார். குருவின் அம்சமான தென்திசை கடவுளுக்கென இந்திய நாட்டில் பல சிறப்பான ஆலயங்கள் உண்டு. இதில் குறிப்பிடத்தக்க ஆலயம் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம். இது பள்ளிகொண்டேஸ்வரர் ஆலயம் என்றும் கூறப்படுகிறது.

 

இங்கு ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில் ஈசன் அன்னையின் மடியில் தலை வைத்தவாறு காட்சியளிக்கிறார். பிரதோஷ சிறப்பு தலமான இங்கு மற்றொரு விஷேசம் என்னவென்றால் அது இங்கு இருக்கும் தட்சிணா மூர்த்திதான். இந்த ஆலயத்தில் குருவின் அம்சமாக, தட்சிணாமூர்த்தி தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார். கோஷ்டத்தில் அமைந்து இருக்கும் இந்த தட்சிணாமூர்த்தி அம்பிகையை அணைத்தவாறு வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சியளிக்கிறார். சாம்ய தட்சிணாமூர்த்தி என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார்.

வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை குத்திட்ட நிலையில் வைத்து, யோக தரிசனம் தங்கியுள்ளார். கரங்கள் மான், மழு தாங்கிய நிலையில் இவரது கோலம் எழில் மிக்கது. போக நிலையில் சக்தி தட்சிணா மூர்த்தியாக விளங்கும் இவரிடம் திருமணப் பேறு கேட்டு இவருக்கான சிறப்பு வழிபாடுகள் இங்கே செய்யப்படுகின்றன. குருவருளைப்பெற்று திருமண வேண்டுதல்கள் நிறைவேற சுருட்டப்பள்ளி போக தட்சிணாமூர்த்தியை வணங்கி அருள் பெறலாம்.