Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாம்பன் சாலை பாலத்தில் பறிபோகும் மயில்களின் உயிர்!

இதுவரை மனித உயிர்கள் பறிபோவதற்கு காரணமாக  இருந்துவந்த பாம்பன் பால சாலைப் போக்குவரத்து, தற்போது தேசியப் பறவையான மயில்களின் உயிரையும் பறித்து வருகிறது.

பாம்பன் சாலை பாலத்தில் பறிபோன மயில் உயிர்
 

நாட்டின் நிலப்பகுதியுடன் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் கடலின் நடுவே அமைக்கப்பட்டது அன்னை இந்திரா காந்தி பாலம். இந்த பாலத்தின் துவக்கப்பகுதியான மண்டபம் தோணித்துறை கடற்கரைப் பகுதியை ஒட்டி அடர்ந்த காட்டு கருவேல மரங்கள் உள்ளன. இந்த அடர்ந்த வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மயில்கள் வாழ்ந்துவருகின்றன. 

இந்த வனப்பகுதியில் உள்ள சிறு பூச்சிகள், பாம்புகள் மற்றும் கடற்கரையோரம் சிறு கடல்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொண்டு உயிர் வாழும் இந்த மயில்கள் அவ்வப்போது இவ்வழியில் உள்ள ரயில் பாதைகளிலும், அதையொட்டி அமைந்துள்ள பாம்பன் சாலைப் பாலத்திலும் கூட்டம் கூட்டமாக காணப்படுவதுண்டு. இதில், பாம்பன் சாலைப் பாலத்தில் பயணிக்கும் வாகனங்களில் செல்பவர்கள் உணவுப் பொருள்களை அவ்வழியே வீசிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


இவ்வாறு வீசப்படும் உணவை உண்ண வரும் மயில், அவ்வழியே வேகமாக வரும் வாகனங்களில் எதிர்பாராத நிலையில் மோதி தங்கள் உயிரை விடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நேற்று மாலை பாம்பன் சாலை பாலப் பகுதியைப் பறந்து கடக்க முயன்ற இரு மயில்கள் அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தன. இதையடுத்து, வனத்துறையின் வேட்டை தடுப்புக் காவலர்கள் உயிரிழந்த அந்த மயில்களை மீட்டு புதைத்தனர். 

மலைப் பகுதிகளில் செல்லும் வாகனங்களை எச்சரிக்கும் வகையில் வன உயிரினங்கள் நடமாடும் பகுதி என அறிவிப்பு பலகை வைத்திருப்பது போல் பாம்பன் சாலைப் பகுதியிலும் 'இது மயில்கள் உலவும் பகுதி' என அறிவிப்பு பலகை வைப்பதன் மூலம் தேசிய பறவையான மயில்களை அழிவில் இருந்து காக்கலாம். வனத்துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் அதை ஏற்படுத்த வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement