Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அரசுப் பள்ளிகளை அழிக்கத் துடிப்பதா?' - மத்திய அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்!

அரசுப்பள்ளிகளை மேம்படுத்தி, பாதுகாத்து அனைவருக்குமான கல்வியை உத்தரவாதப்படுத்துவதற்குப் பதிலாக, அரசுப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

கல்வி

"மத்திய நிதி ஆயோக் குழு சமீபத்தில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளுக்கான மூன்றாண்டு (2017-18, 2019-20) செயல்திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வி, சுகாதாரம் போன்ற சேவைத்துறையில் இயங்கி வரும் அரசுப்பள்ளிகளை, அரசு நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்க்கக்கூடிய ஓர் ஆபத்தான திட்டத்தை நிதி ஆயோக்குழு மூலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் 20 மற்றும் 20-க்கு கீழே மாணவர்கள் எண்ணிக்கை உடைய பள்ளிகள் 1 லட்சம் உள்ளதாகவும், 50 மற்றும் 50-க்கு கீழே உள்ள மாணவர்கள் எண்ணிக்கை உடைய பள்ளிகள் 3.70 லட்சம் உள்ளதாகவும் இவை நாடு முழுவதும் உள்ள மொத்த அரசுப்பள்ளிகளில்
36 சதவிகிதம் என நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது. 

தனியார் துறையை ஊக்குவிக்கும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கையால் தமிழகத்தில் 2001-ம் ஆண்டு தனியார் பள்ளிகளில் 11,68,439 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2014-ம் ஆண்டு 36,17,473 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இதே காலத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்திட, பாதுகாத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தமிழகத்தில் பல அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. 

இப்போதும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மாணவர்களின் எண்ணிக்கை 50-க்கும் 20-க்கும் குறைவாக பல ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இத்தகைய பள்ளிகளை அரசு - தனியார் கூட்டுத் திட்டம் என்ற பெயரில் தனியாரிடம் ஒப்படைப்பது நாளடைவில் ஒட்டுமொத்த பள்ளிக் கல்வியைத் தனியார்மயமாக்கிடுவதில் முடியும். இதனால் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த குறிப்பாகக் கிராமப்புற  குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாக மாறிவிடும். கல்வி அடிப்படை உரிமை; அரசு அளிக்கக்கூடிய சலுகையல்ல. ஏழை, எளிய, தலித் மற்றும் பழங்குடி பகுதியைச் சார்ந்த குழந்தைகளுக்கு கல்வியளிக்கும் பொறுப்பை மத்திய, மாநில அரசுகள் தட்டிக்கழிக்கின்றன.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, நிதிஆயோக் என்ற குழுவை அமைத்தது. முக்கியமான கொள்கை முடிவுகள் எடுக்கிறபோது மாநில முதலமைச்சர்களும், நிதிஆயோக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கூட்டாட்சி தத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் நிதிஆயாக் குழு செயல்படும் என்று மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தது. ஆனால், தற்போது மாநில முதலமைச்சர்களை அழைக்காமல் அவர்களுடைய ஆலோசனைகளைப் பெறாமல் நிதிஆயோக் குழு பள்ளிக்கல்வியைத் தனியார்மயமாக்கக்கூடிய முடிவை எதேச்சதிகாரமாக எடுத்திருக்கிறது. அரசியல் சட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வி பிரச்னையில் மத்திய அரசு எடுத்திருக்கக்கூடிய முடிவு மாநிலங்களுடைய உரிமைகளைப் பறிக்கக்கூடியதாகும். 

அரசுப்பள்ளிகளைத் தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய நிதிஆயோக் குழுவின் மூன்றாண்டு செயல்திட்டத்தை மாநில அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது" என தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார் ஜி.ராமகிருஷ்ணன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement