"நீ தோற்கடிக்கப்பட்டாய் செல்லமே!"- கதறும் அனிதாவின் தந்தை #NEETkilledAnitha | Anitha's Father's cry and anguish over his daughter death - Neet is the Reason

வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (01/09/2017)

கடைசி தொடர்பு:20:47 (01/09/2017)

"நீ தோற்கடிக்கப்பட்டாய் செல்லமே!"- கதறும் அனிதாவின் தந்தை #NEETkilledAnitha

அனிதா

நீட் தேர்வில் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத விரக்தியில் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா இன்று தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் இந்த தற்கொலை முடிவானது தமிழகத்தைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும், அனிதாவின் மரணத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மட்டுமே காரணம் என்று மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இவர் 12-ம் வகுப்பில் 1,176 மதிப்பெண்கள் மற்றும் கட்ஆப் மதிப்பெண் 196.5 பெற்று மருத்துவராக வேண்டுமென்பதையே லட்சியமாக வைத்திருந்தார். இவரின் இந்த ஆசைக்கு மத்திய அரசு கொண்டுவந்த நீட் தீர்வு பெரும் இடியாக விழுந்தது. இருப்பினும் நீட் தேர்வு எழுதிய அனிதா, அதில் 86 மதிப்பெண்களே பெற்றார். இதனால் மருத்துவப் படிப்பு என்பது வெறும் கனவாகப் போய்விடுமோ என்ற அனிதாநிலையில், நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்றார். ஆனால், ஒரு மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்வு விளக்கு அளிக்க முடியாது என தமிழக மாணவர்களின் கனவைச் சிதைத்தது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பால் கடந்த சில தினங்களாகவே மன அழுத்தத்தில் இருந்துவந்துள்ளார் அனிதா. இனி மருத்துவர் படிப்பு என்பது முடியாத காரியம் என்ற நினைத்திருந்த அனிதா, இன்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

அனிதாவின் இந்த விபரீத முடிவால் அவர் ஊரே பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. இதுகுறித்து அனிதாவின் பக்கத்து வீட்டுப் பெண்மணி ஜெயந்தி, "அனிதாவின் அம்மாவுக்கு சரியான மருத்துவம் கிடைக்காததால் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். 'என் ஊரில் சரியான மருத்துவ வசதி இருந்திருந்தால் என் அம்மாவைக் காப்பாற்றி இருக்கலாம். இனி இந்த ஊரில் எந்தப் பிள்ளையும் மருத்துவம் கிடைக்காமல் அம்மாவை இழக்கக்கூடாது. அதனால் நான் மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்வேன்' என்று கூறி அதையே லட்சியமாக மாற்றிக்கொண்டார். அதற்காகக் கடுமையாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றார். இந்த நேரத்தில் நீட் தேர்வு வர அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்றார். நேற்று தன் தந்தையிடம்,  'நீட் தேர்வில் நான் தோற்றுவிட்டேன் அப்பா' என்று அழுதிருக்கிறார். அதற்கு அவர் தந்தை, 'நீட் தேர்வில் நீ தோற்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் உன்னை தோற்கவைத்துவிட்டன செல்லமே' என்று கூறி சமாதானப்படுத்தினார். இருந்தாலும், 'இனி என் மருத்துவ படிப்பு எல்லாம் கனவுதான்' என்று கூறியுள்ளார். இந்த நிலையில், இன்று இப்படி ஒரு தண்டனையை மத்திய மாநில அரசுகள் இவளுக்குக் கொடுத்துவிட்டன. அனிதாவின் உடல் முன் அவர் தந்தை, 'நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிவரும் மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கணும்னுதானே உச்ச நீதிமன்றம் வரைக்கும் போனா. இப்படி ஒரு முடிவை எடுத்திட்டியே டா' என்று கதறி அழுகிறார். எங்களால் அதைப் பார்க்க முடியவில்லை" என்றார் அழுதுகொண்டே.

தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைப் பாழாக்க நினைத்த மத்திய, மாநில அரசுகள் தமிழகத்துக்குக் கொடுத்த பரிசு அனிதாவின் மரணம் மட்டும்தான். இப்போது இந்திய அரசு பெருமைப்பட்டுக் கொள்ளட்டும்... இன்னும் எத்தனை அனிதாக்களை மரணத்துக்குப் பரிசாகக் கொடுக்கப்போகிறதோ?


டிரெண்டிங் @ விகடன்