Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கறுப்புப் பணம் வரவில்லை; பயங்கரவாதம் அழியவில்லை... பணமதிப்பு நீக்கத்தால் என்ன பயன்?

500, 1000 ரூபாய் நோட்டுகளை, பிரதமர் மோடி ஒரே இரவில் ஒழித்தார். `ஆஹா... இனிமே கறுப்புப் பணம் வெளியே வந்துவிடும்!' என ஃபேஸ்புக்கில் பரபரப்பானார்கள் அப்பாவிகள். பொதுக்கூட்டத்தில் பேசிய  பிரதமர் மோடி, ``50 நாள்களில் நிலைமை சரியாகிவிடும். இல்லையென்றால், என்னை எரித்துவிடுங்கள்'' என ஆவேசமானார். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பண முதலைகளுக்குப் பாதிப்பில்லை; சாமானியர்கள்தான் அல்லல்பட்டனர். ஏ.டி.எம் வாசல்களிலும், வங்கிகளிலும், கடைகளிலும் நீண்ட வரிசையில் கால் கடுக்கக் காத்துக் கிடந்தனர்.

பணம்

திருமண வீடுகள், வணிகக் களங்கள் மற்றும் சாதாரண பணப் பரிவர்த்தனைகள்கூட பொலிவிழந்து காணப்பட்டன. அன்றாட செலவுகளுக்காகப் பணத்தை எடுக்க வரிசையில் நின்றே பலர் உயிரிழந்தனர். நாட்டுக்கு இது பெரிய இழப்பாகத் தெரியாது; ஆனால், அந்த வீட்டுக்கு ஏற்பட்ட இழப்பை யாரால் சரி செய்ய முடியும்? வரிசையில் நின்று பலியானவர்களுக்கு, மத்திய அரசு  நிவாரண உதவியும் அளிக்கவில்லை.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது வெளியான இரு சம்பவங்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 

டெல்லி அருகேயுள்ள குர்கானில் எஸ்.பி.ஐ வங்கியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் நந்தாலால், பணம் எடுக்க வரிசையில் நின்றார். அவரை வரிசையிலிருந்து யாரோ தள்ளிவிட்டுவிட,  நந்தாலால் கதறி அழுத புகைப்படம் `இந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியாகி, கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. `பணக்காரர்கள் மட்டும்தான் அழுவார்கள் என்று அவர்கள் சொன்னார்கள்' எனத் தலைப்பிட்டு, `இந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகை அந்தப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. 

இதேபோல தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள வாழ்க்கை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். பாபநாசத்தில் உள்ள வங்கி ஒன்றில் பணம் எடுப்பதற்காக சுப்ரமணியன் நீண்டநேரம் வரிசையில் நின்றார். திடீரென கீழே விழுந்த அவர், வங்கிக்குள்ளேயே இறந்துவிட்டார். அவரை மடியில் கிடத்திக்கொண்டு மனைவி அரற்றிக்கொண்டிருக்க, மக்கள் சுப்ரமணியனையா கவனிப்பார்கள்? சுப்ரமணியனின் இறப்பு, வங்கிப் பணியை பாதிக்கவேயில்லை. வங்கிக்குள் சடலம் கிடக்க, வங்கி அலுவலர்கள் வழக்கம்போல தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தனர். சுப்ரமணியன் இறந்து கிடப்பதை  செல்போனில் படம் எடுத்துக்கொண்டும்,  தங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டும் கிளம்பினர் மக்கள். 

பணம்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், இன்னல்களைப் பொறுத்துக்கொள்ளலாம்; இறப்புகளை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்? உயிரிழப்புக்கு எந்த நிவாரண உதவியும் வழங்காத மத்திய அரசை என்னவென்று கூறுவது?  பணமதிப்பு நீக்க நடவடிக்கை, இந்தியர்களுக்கு நீண்ட நேரம் வரிசையில் நிற்பது எப்படி என்பதைக் கற்றுகொடுத்ததைத் தவிர வேறு எந்தப் பலனையும் தரவில்லை?

மத்திய அரசின் குட்டை தற்போது ரிசர்வ் வங்கி உடைத்தெறிந்துள்ளது. `பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 15.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 500,1,000 ரூபாய் நோட்டுகள்  மீண்டும் வங்கிகளுக்குத் திரும்பியது. ஒரு சதவிகித நோட்டுகள் வங்கிக்குத் திரும்பவில்லை' என இந்திய ரிசர்வ் வங்கி தன் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, `பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது' என காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, ``மோடி, தன் செய்கைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பணமதிப்பு நீக்க விவகாரத்தில் மத்திய அரசு உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெரிவிக்கவில்லை. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.25 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. ஏழைகள் மட்டுமே அவதியுற்றனர். கறுப்புப் பணமும் வெளியே வரவில்லை; பயங்கரவாதமும் அழியவில்லை. பணமதிப்பு நீக்க விவகாரம் குறித்து மக்களுக்கு விளக்கவேண்டிய கடமை மோடிக்கு இருக்கிறது'' என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல், ``பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பணக்காரர்களுக்கு ஆதாயத்தையும் ஏழைகளுக்கு வேதனையையும் கொடுத்துள்ளது'' எனக் கூறியுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ``99 சதவிகித நோட்டுகள் சட்டரீதியாக மாற்றப்பட்டுள்ளன என்றால், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் திட்டமா இது? பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு யோசனை கூறிய பொருளாதார வல்லுநர்களுக்கு நோபல் பரிசுதான் வழங்க வேண்டும்'' எனச் சாடியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement