'அனிதாவின் வேதனையை என் மனம் உணர்கிறது' - கவலை தெரிவித்த ரஜினி

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.5. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது.  மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனிதாவுக்கு, நீட் தேர்வு பெரும் இடியாக விழுந்தது. நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரும் மனுவை, சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளனர் என்றும், இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையிட்டார். இந்த மனுவில் எதிர் மனுதாரராக அனிதா சேர்க்கப்பட்டார். அப்போது, ”நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்கவேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும்; மருத்துவராகும் கனவு பறிபோய்விடும்" என உச்ச நீதிமன்றத்தில் அனிதா மனு அளித்தார். ஆனால், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சலிங் நடைபெற்றது. இதனால் மனமுடைந்த அனிதா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த், 'அனிதாவுக்கு நிகழ்ந்தது மிகவும் எதிர்பாராத ஒன்று. அவர் இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர், அனுபவித்த வலியையும் வேதனையையும் என் மனம் உணர்கிறது. எனது இரங்கலை அவரது குடும்பத்துக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!