மும்பை ஜெயிலில் இருந்து தப்பிய கொள்ளையர்கள் குமரியில் கைது!

பல்வேறு  கொள்ளை வழக்குகளில் பல மாநிலக் காவல்துறையினரால் தேடப்பட்ட கொள்ளையர்கள் இரண்டு பேர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மும்பை கல்யான் அதர்வாடி சிறைச்சாலையில் இருந்து தப்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கன்னியாகுமரி மாவட்டம் ஆனைப் பாலம் அருகே கோட்டார் போலீஸார் வாகன சோதனை நடத்தியபோது கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான மணிகண்டன் மற்றும் சேலத்தைச் சேர்ந்த 23 வயதான டேவிட் என்ற தேவந்திரன் ஆகியோரை போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கொள்ளையர்கள் என்று தெரியவந்தது. உடனே அவர்களைக் கைதுசெய்து கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். 

போலீஸ் விசாரணையில், ‘மணிகண்டன் தனது 12-ம் வயதில் புறாக்களை திருடியுள்ளார். பின்னர் வீடுபுகுந்து கொள்ளை, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனக் கடத்தல், வங்கியில் கொள்ளை முயற்சி, அடிதடி, கொலை முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில்  ஈடுபட்டுள்ளார். இதனால் இவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநில காவல் நிலையங்களிலும் இவர்மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. இதனால் போலீஸார் தென்மாநிலங்கள் முழுவதும் இவரைத் தேடி வந்தனர். இதனிடையே, இவர் கடந்த 2015-ம் ஆண்டில் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் மாருதி ஸ்விஃப்ட் கார் ஒன்றைத் திருடி மையிலாடி பகுதியில் அதே காரில் சென்று கோயில் உண்டியலைத் திருடியுள்ளார்.

அந்தப் பணத்துடன் அதே காரில் மும்பை சென்றுள்ளார். அங்கு மான்படா, மும்ரா ஆகிய ஸ்டேஷன்களில் கைதாகி விசாரணைக் கைதியாக இருந்தபோது, அந்த ஸ்டேஷன் பாரா போலீஸை தாக்கிவிட்டு தப்பி ஓடியபோது மும்பை போலீஸார் கைதுசெய்து மும்பை  கல்யான் அதர்வாடி சிறைச்சாலையில் அடைத்தனர். அங்கு சேலத்தைச் சேர்ந்த டேவிட் என்ற தேவேந்திரன் என்பவருடன் சிறையில் நட்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து திட்டமிட்டு  23.07.2017 அன்று காலை சிறைக் காவலர்களுக்குத் தெரியாமல் வெளியே வந்து கண்காணிப்பு கேமரா கேபிள் லைனை துண்டித்து, அந்தக் கேபிள்கள் மூலம் வெளியே தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர், ஒரு காரை லிப்ட் கேட்பது போன்று நிறுத்தி கார் உரிமையாளரை தாக்கிவிட்டு காரோடு தப்பியிருக்கிறார்கள்.

கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி புறப்பட்டு, 25-ம் தேதி மதுரை வந்துள்ளனர். அங்கிருந்து நாகர்கோவிலுக்கு வந்த இருவரும் பல இடங்களில் கொள்ளையடித்துள்ளனர். நேற்று நாகர்கோவில் பகுதியில் போலீஸாரின் வாகன சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் கோட்டார் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டனர். போலீஸாரின் விசாரணையில் இவர்கள் மும்பை சிறைச்சாலையில் இருந்து தப்பிய கைதிகள் எனத் தெரியவந்ததையடுத்து போலீஸார் கைதுசெய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு நாகர்கோவில் சிறையில் அடைத்துள்ளனர். கொள்ளையர்கள் இருவரும் மும்பையில் இருந்து தப்பி வந்தவர்கள் என்பதால் மும்பை போலீஸார் நாகர்கோவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து மணிகண்டன் மற்றும் தேவந்திரனை தங்கள் காவலில் எடுத்து மும்பை கொண்டு சென்று விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். மும்பை போலீஸார் நாகர்கோவில் வருவதால் குமரிமாவட்ட போலீஸ் வட்டாரம் பரபரப்பாகக் காணப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!