வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (01/09/2017)

கடைசி தொடர்பு:20:55 (01/09/2017)

டெங்கு ஒழிப்பு பேரில் வசூல் வேட்டை: தஞ்சை மாநகராட்சியின் அடாவடி

டெங்கு

டெங்கு ஒழிப்பு என்ற பெயரில் தஞ்சாவூர் மாநகராட்சி ஊழியர்கள் கட்டாய வசூல் செய்தும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வருகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் தஞ்சாவூர் பகுதி மக்கள். 

இதுகுறித்து புகாரளிக்க வந்த மக்கள், ”மாவட்டம்தோறும் அரசு டெங்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்துவற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தேங்கிக்கிடக்கும் சாக்கடை நீர் மற்றும் கழிவு நீர் இவைகளால்தான் கொசு உற்பத்தி ஆகிறது என வீடுகளின் கொள்ளைப்புறம் மற்றும் சாக்கடைகளில் கொசு மருந்து தெளித்து வருகிறார்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள். ஒவ்வொரு பகுதியிலும் வாரத்துக்கு ஒருமுறை கொசு மருந்து தெளிப்பது என்பது ஒரு மாநகராட்சியின் கடமை. தற்போது டெங்கு ஒழிப்பான் என்ற பெயரில் வீடுகளில் ஆய்வுசெய்து அது சரியில்லை, இது சரியில்ல என்று கூறி பொதுமக்களிடம் அடாவடித்தனமாக 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அபராதமாக வசூலித்துவருகிறார்கள். இல்லையென்றால் குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பைத் துண்டித்துவிடுவோம் என்று மிரட்டியும் வருகிறார்கள். இதனால் பொதுமக்களும், குடியிருப்புவாசிகளும் அபராதம் கட்டி வருவதோடு பெரும் அச்சத்திலும் வாழ்ந்து வருகிறோம்’.

இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும், மாநகராட்சி அலுவலர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. உடனே மாநகராட்சி ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூட்டாக தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க