வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (01/09/2017)

கடைசி தொடர்பு:18:01 (04/09/2017)

‘அனிதா மரணத்துக்கு மாநில, மத்திய அரசுகள் மட்டுமல்ல நீதிமன்றமும் பொறுப்பேற்க வேண்டும்!’ - கொதிக்கும் சமூகச் செயல்பாட்டாளர் ஓவியா

அனிதா

‘கல்வியே எல்லாவிதமான ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை அளிக்கும்’ என்பார்கள். ஆனால், அந்தக் கல்வி ஏழை, எளிய மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடவும் கல்வியில் சமூக நீதியைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் இடஒதுக்கீட்டு முறைக் கல்வி உள்ளிட்ட துறையில் பின்பற்றப்படுகிறது. ஆனால், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தமிழகத்தில் கொண்டுவரப்படும் எனும் அறிவிப்பு கிராமப்புற மாணவர்களுக்குப் பேரிடியாக விழுந்தது. 

மாநில முறை பாடத்திட்டத்தில் படித்து, பொதுத்தேர்வெழுதி அதன் மதிப்பின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்காகக் காத்திருந்த மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா.. இல்லையா... எனும் குழப்பத்துக்கு உள்ளாகினர். நீதிமன்றம் நீட் தேர்வை வலியுறுத்த தேர்வும் நடைபெற்றது. 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் மிக நல்ல மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வில் மருத்துவப் படிப்புக்கான புள்ளிகள் பெறாத மாணவர்கள் பலர். அவர்களில் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதாவும் ஒருவர். பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று, கட் ஆஃப் 196.75 யைத் தக்க வைத்திருந்தார். இவரே இந்த நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்றவர். 

நீட் தேர்வு என்ன என்பதே எனக்குத் தெரியவில்லை என்றும், அதற்கு கோச்சிங் செல்ல பொருளாதார வசதி இல்லை என்றும் தனது oviyaபேட்டிகளில் கூறிவந்திருந்தார். இந்நிலையில், தன் கனவான மருத்துவப் படிப்பைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லையென, அனிதா இன்று தற்கொலை செய்துகொண்டார். இந்தச் செய்தி பலருக்கும் பேரதிர்ச்சியை அளித்தது. இது குறித்துச் சமூகச் செயல்பாட்டாளர் ஓவியாவிடம் பேசினோம். 

“அனிதாவின் தற்கொலை மிகவும் வேதனையானது. மன அழுத்தத்தைத் தருகிறது. ஆனபோதும், தற்கொலை எதற்கும் தீர்வாகி விடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தோல்விகளை எதிர்கொள்ள நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு இன்னும் தெளிவாகக் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. 

அனிதா, ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து ரொம்பவும் கஷ்டப்பட்டுப் படித்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தார். சின்ன வயதிலிருந்து மாநில கல்விமுறையில் படித்து வந்தவர். அந்த முறையில்தான் தனது லட்சியமான மருத்துவப் படிப்பையும் படிக்கப் போகிறோம் என்று நினைத்திருந்தவர். அதனால், இடையில் திடீர் மாற்றமாக நுழைத்த நீட் எனும் நுழைவுத் தேர்வு பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்க வில்லை. நீட் தேர்வைக் கண்டு அச்சத்தோடே இருந்திருக்கிறார். மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி இந்த ஆண்டு நிச்சயம் நீட் தேர்வு வராது என்ற நம்பிக்கையை அனிதா போன்ற மாணவர்களுக்குத் தொடர்ந்து அளித்துக்கொண்டே வந்தது. அந்த நம்பிக்கையில் தனது கனவு எப்படியும் நிறைவேறும் என்று காத்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவரின் நம்பிக்கை பொய்த்துப்போனது. அதன் மன அழுத்தமே இந்த முடிவை நோக்கித் தள்ளியுள்ளது. 

அனிதாவின் மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்ல நீதிமன்றமும் பொறுப்பேற்க வேண்டும். சி.பி.எஸ்.ஸி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கவலைப்பட்ட நீதிபதிகள் இப்போது தன் உயிரையே நீத்துகொண்ட அனிதாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? 

சமீபத்தில் ஒரு மாணவி ஒருவர் தற்கொலைச் செய்துகொண்ட செய்தியைப் படித்திருப்பீர்கள். ஆடையில் ரத்தக் கறை இருந்ததால், ஆசிரியர் மீது சந்தேகம் கொண்டு கைதுசெய்கிறார்கள் எனில், அனிதாவின் மரணத்துக்குக் காரணமான எடப்பாடி அரசு, மத்திய அரசு மீது யார்தான் கேள்விகள் எழுப்புவது?

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விடவும் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு, திராவிட இயக்கங்கள் சமூக நீதியைப் பின்பற்றி இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்துகிறார்கள். அதனாலேயே பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியில் தேர்ச்சியடைந்து, பொருளாதார நிலையிலும் வளர்ச்சியடைந்துள்ளனர். அதனால் தமிழகத்தில் கல்வியிலும் மருத்துவத்திலும் சிறப்பான இடத்தில் உள்ளது. இந்த நிலையைச் சீரழிக்கவே நீட் எனும் அம்பை மத்திய அரசு எய்திருக்கிறது. இது இங்கே நிலவும் சமூக நீதியை குலைக்கவே செய்யும். இதை நாம் தொடர்ந்து எதிர்த்தாக வேண்டிய சூழலில் உள்ளோம் என்பதை மறுக்க முடியாது. ஆன போதும் அனிதாவைப் போன்று யாரும் தற்கொலை எனும் நிலையை நோக்கிச் செல்வதை கை விட வேண்டும்." என்றார். 

பாகுபாடுகளை நீக்க வந்த கல்வியைப் பெறுவதில் பாகுபாடு காட்டக்கூடாது.! 


டிரெண்டிங் @ விகடன்