'டெல்லியில் முகாமிட்டு என்ன செய்தீர்கள்?' - அமைச்சர்களைச் சாடிய ஜெயா டிவி

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தமிழக அரசுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க-வுக்கு மிகவும் இணக்கமான ஜெயா ப்ளஸ் டிவி, 'நீட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு என்ன செய்தார்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளது. 

இன்று மாணவி அனிதாவின் இறப்புச் செய்தி வந்தவுடன் ஜெயா டிவி-யும் அதுகுறித்து செய்தி வெளியிட்டது. அப்போது, 'நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு என்ன செய்தது?', 'தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு என்ன செய்தார்கள்?', 'ஏன்  தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தைச் சரியாகக் கையாளவில்லை?' என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பின. சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'ஜெயா டிவி மற்றும் நமது எம்.ஜி.ஆர் ஊடகங்கள் அ.தி.மு.க-வுக்குச் சொந்தம். விரைவில் அவற்றைக் கைப்பற்ற சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான், தமிழக அரசைச் சாடி ஜெயா டிவி செய்தி வெளியிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!