வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (02/09/2017)

கடைசி தொடர்பு:13:02 (02/09/2017)

”என்னிடம் எளிமையான கேள்வி ஒன்று இருக்கிறது!” - இறந்த அனிதாவும் விடை கிடைக்காத அவளது கேள்வியும்

அனிதா

''என்னிடம் எளிமையான கேள்வி இருக்கிறது. இங்கு எல்லோருக்கும் எல்லாமும் சரி சமமாகக் கிடைக்கிறதா... எல்லோருக்கும் ஒரே தரமான கல்வி கிடைக்கிறதா... எல்லோருடைய பொருளாதார நிலையும் ஒன்றுபோல இருக்கிறதா... இங்கு ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லையா...? எனக்குப் பெரிதாக அரசியல் புரிதல்கள் எல்லாம் ஒன்றும் இல்லை. எல்லா அரசியலும் எங்களுக்கும் தெரியும் என்பவர்கள், எனது இந்த எளிமையான கேள்விக்கு பதில் சொல்லட்டும். இங்கு யாருக்கும் எதுவும் சரிசமமாகக் கிடைக்காதபோது அனைவருக்கும் ஒற்றைத் தேர்வு என்பது யாரை ஏமாற்றும் வேலை..?  நான் கேட்கும் கேள்விகள் அனைத்தும், ஒரு தனிமனிதியின் கேள்விகள் இல்லை. கல்வியை இறுகப்பற்றி மேலே எழுந்துவிடலாம் என்ற பெரும் கனவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மாணவர்களின் கேள்விகள். இது சங்கடம் தரும் கேள்விகள்தான். ஆனால், நியாயம் கிடைக்கும்வரை இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புவேன்... எழுப்புவோம்” என்று கடந்த பத்து நாள்களுக்கு முன் சபதமிட்ட ஒரு பெண்தான், இன்று மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலில் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். 

அவர் வேறு யாருமல்ல... தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிற்கும் மாணவிகளின் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம்வரை சென்ற அரியலூரைச் சேர்ந்த 17 வயது மாணவி அனிதாதான். கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஓர் ஊரின் மருத்துவக் கனவைச் சுமப்பதற்காக, கூலித் தொழிலாளியின் மகளாக மேலேவந்த முதல் தலைமுறை மாணவி அனிதா. மருத்துவராக வேண்டும் என்ற குறிக்கோளிலேயே அல்லும் பகலும் அயராது கண்விழித்துப் படித்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் 1,176. ஆனாலும், அவரது கனவைப் பொசுக்கிச் சென்றது நீட் எனும் பூதம். ''பதினேழு வயது நிரம்பிய சிறுமியைத்தான் அவள் விரும்பிய படிப்பைப் படிக்கவிடாமல் இந்தச் சட்டம் தடுத்துக் கொண்டிருக்கிறது. அவள் பத்தாம் வகுப்பிலிருந்தே அதற்கான கனவுடன் படித்துவருகிறாள். நீட் தேர்வுக்கு முன்பே ஏன் நீதிமன்றம் வரவில்லை என்று கேட்கிறார்கள். அரசு உறுதியாக ஒரு நிலைப்பாட்டைச் சொல்லாதபோது யாருடைய வார்த்தையை நம்பி நாங்கள் எங்கள் முடிவை எடுக்க முடியும்?'' என்று டெல்லியில் நீட் தேர்வு தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின்போது அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கூறிய வார்த்தைகள் இவை. 

ஆனால், நீட் தேர்வு தொடர்பாக அரசாங்கங்கள் ஒரு நிரந்தரமான நிலைப்பாட்டை எடுத்ததோ, இல்லையோ... ஆனால், அனிதா தனக்குத்தானே ஒரு கோர முடிவை எடுத்துவிட்டார். அவர் எடுத்த இந்த நிலைப்பாட்டால், அவருடைய குடும்பம் மட்டுமல்ல... அந்தக் கிராமமுமே ஜீரணிக்க முடியாமல் மயான அமைதியுடன் காணப்படுகிறது. கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் என்பதுபோல, ஓர் உயிர் சென்ற பின்புதானே பலரும் தன் தரப்பு நியாயங்களை வைப்பார்கள். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ''நீட் தேர்வை எதிர்த்துக் கடுமையாகப் போராடினோம். மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது'' என்கிறார்.

அனிதா

அவருக்கு எப்படித் தெரியும் ஒரு கனவு தகர்ந்திருக்கிறது என்று... ஒரு தட்டான்பூச்சி பறக்க முடியாமல் வீழ்ந்திருக்கிறது என்று... அரசியல்வாதிகளே... நீங்கள் மக்களைப் பற்றி எங்கே சிந்திக்கிறீர்கள்?  "யாரோடு எந்த அணியில் சேரலாம், யார் அதிகமாகப் பணம் தருவார்கள், வருமானவரித் துறையினரின் ரெய்டு நம் வீட்டில் பாயாமல் இருக்க என்ன வழி..?" என்கிற கேள்விகளே உங்கள் உள்ளங்களில் அதிகம் ஓடிக்கொண்டிருக்கின்றன. உங்கள் அரசியல் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதற்கே மத்திய அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் நேரம் சரியாய் இருக்கிறது. இதில் எப்படி மக்களின் பிரச்னைகளை, மாணவர்களின் மருத்துவக் கனவுகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள்? 

''அனிதாவின் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்'' என்று ஒற்றை வரியில் நீங்கள் சொல்லிவிட்டீர்கள். ஆனால், அவர் உயிருடன் இருந்தபோது அவருடைய மருத்துவக் கனவை நிறைவேற்றி இருந்தீர்கள் என்றால், ''என் தந்தை சுமை தூக்குவதை நான் இழிவாகக் கருதவில்லை. ஆனால், அதே வேலையைத்தான் அவரின் அடுத்த தலைமுறையும் செய்ய வேண்டும் என்று இந்த அரசு நுணுக்கமாகச் செயல்படுகிறதே... அதற்கு எதிராகத்தான் போராடுகிறேன்... எப்படியாவது டாக்டர் சீட் கிடைக்கணும்.... அதற்காகப் போராடுவேன்'' என்று தெரிவித்து, நீதிமன்றத்தில் தீவிரமாய்ப் போராடிய அனிதா இன்று இறந்திருக்க மாட்டார்.  அரசியல் திமிங்கலங்களை எதிர்த்துப் போராட முடியாமலும், மருத்துவக் கனவை நிறைவேற்ற முடியாமலும் தன் உயிரை விட்டிருக்க மாட்டார். 

''நீட் தேர்வில் நான் தோற்றுவிட்டேன் அப்பா'' என்று நேற்று கதறி அழுத மகளைப் பார்த்து, ''நீட் தேர்வில் நீ தோற்கவில்லை... மத்திய, மாநில அரசுகள்தான் உன்னைத் தோற்க வைத்துவிட்டன'' என்று மகளைத் தேற்றிய அனிதாவின் அப்பாதான், இன்று... ''நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிவரும் மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கணும்னுதானே உச்ச நீதிமன்றம் வரைக்கும் போன. இப்ப, இப்படி ஒரு முடிவை எடுத்திட்டியேடா''னு என்று யாரும் ஆறுதல் சொல்ல முடியாத அளவுக்கு அழுதுகொண்டிருக்கிறார். 

அனிதாவின் குடும்பத்துக்கு  என்ன பதில் சொல்லப்போகிறது மத்திய - மாநில அரசுகள்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்