வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (02/09/2017)

கடைசி தொடர்பு:11:53 (02/09/2017)

'தி.மு.க மேடையில் வைகோ..!' உற்சாகத்துடன் அணி சேரும் எதிர்க்கட்சிகள்!

ஸ்டாலின் வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தி.மு.க நடத்தும் கூட்டத்தில் மேடை ஏறுகிறார். இதனால், தி.மு.க கூட்டணியில் இணைந்து போராட்ட களத்தைச் சந்தித்து வரும் கட்சிகள் உற்சாகமடைந்துள்ளன.

'முரசொலி' நாளிதழின் 75-வது ஆண்டையொட்டி, அதன் பவளவிழா கொண்டாட்டங்கள் தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 10 மற்றும் 11-ம் தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் மூத்த பத்திரிக்கையாளர்கள், பத்திரிகை அதிபர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற நடிகர் கமல், கவிஞர் வைரமுத்து ஆகியோர் உரையாற்றினர். நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராக அந்த விழாவில் கலந்து கொண்டார். ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையில், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மிகப் பிரமாண்டமாக செய்யப்பட்டு இருந்தன. 

இந்த விழாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு, மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்திலேயே மழை கொட்டியது. ஆனாலும், பவளவிழா மலர் மட்டும் வெளியிடப்பட்டது. மழை நீடித்ததால் பாதியிலேயே விழா நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 'முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் வேறொரு நாளில்  பிரமாண்டமாக நடைபெறும்' என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, அந்த விழா கொட்டிவாக்கம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்க உள்ளார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் வரவேற்க, மு.க.ஸ்டாலின் நன்றி கூறுகிறார். திராவிடர் கழக தலைவர் வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் என தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் வைகோ பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதுடன், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடையே மிகுந்த உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தி.மு.க. கூட்டணியில் வைகோ இணையக்கூடும் என்ற பரவலாகப் பேசப்படுவதுடன், எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு உருவாகும் கூட்டணி ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.  

பவளவிழா

2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்குள் வைகோவைக் கொண்டுவரும் வேலைகள் ஆரம்பத்தில் நடந்தன. மு.க.தமிழரசு மகன் அருள்நிதியின் கல்யாணத்தை முன்வைத்து, தேர்தல் கூட்டணிக்கான பேச்சுகள் நடந்தன. மு.க.ஸ்டாலின், அண்ணாநகர் வீட்டுக்கேச் சென்று வைகோவுக்கு, திருமண அழைப்பிதழைக் கொடுத்தார். அந்தத் திருமணத்தில் வைகோ கலந்து கொண்டார். அப்போது, 'அவரை உரிய மரியாதையுடன் வரவேற்கவில்லை' என்று ம.தி.மு.க நிர்வாகிகள் வருத்தப்பட்டனர். இந்நிலையில், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க, தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், த.மா.கா ஆகிய கட்சிகள் அணி சேர்ந்தன. குறிப்பாக, இந்த அணியில் விஜயகாந்த் சேர்ந்தது தேர்தல் களத்தில் தி.மு.க-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. கருணாநிதி உடல்நலம் இல்லாமல் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரைப் பார்க்கச் சென்ற வைகோவைத் தி.மு.க-வினர் விரட்டியடித்தனர். இந்த நிலையில் ஜெயலலிதா மரணம், பெங்களூரு சிறையில் சசிகலா... என்று அடுத்தடுத்து நடந்த அரசியல் மாற்றங்கள், கட்சிகளைத் திசைமாற வைத்து விட்டன.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் சட்டமன்ற வைரவிழாவில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். கடந்த ஜூன் மாதம் வைகோ, மலேசியா சென்றபோது அவரை அந்நாட்டிற்குள் அனுமதிக்க மலேசிய அரசு மறுத்துவிட்டது. இந்த நிகழ்வைக் கண்டித்து ஸ்டாலின் அப்போது அறிக்கை வெளியிட்டார். அதில், ''ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ, முறைப்படி விசா பெற்றுச்சென்றுள்ளார். அவரை, மலேசிய அரசு அனுமதிக்காமல் தனி அறையில் வைத்து அவமரியாதை செய்தது, மனித உரிமை மீறல் மட்டுமின்றி, அத்துமீறலும், அராஜக நடவடிக்கையும் ஆகும். இந்திய நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து, ஓர் அரசியல் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் வைகோவுக்கு மலேசியா அனுமதி மறுத்தது குறித்து மத்திய அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். 

வைகோ கருணாநிதி

அதன்பிறகு, '' 'முரசொலி' பவளவிழாவில் கலந்துகொள்ள வேண்டும்'' என்று வைகோவிடம் தி.மு.க தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு வைகோ, அன்றைய தினம் தான் முக்கியமான திருமணத்தில் பங்கேற்க இருப்பதாகவும், முரசொலி பவளவிழா வெற்றிபெற வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தார்.  இந்நிலையில், உடல் நலமின்றி வீட்டில் ஓய்வெடுத்து வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரின் கோபாலபுரம் இல்லத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி சந்தித்து நலம் விசாரித்தார் வைகோ. அப்போது, ''என்னை அரசியலில் வளர்த்தெடுத்தவர் கலைஞர். அவரின் நிழலாக 23 ஆண்டுகள் இருந்தேன். அவர் மீது சிறு துரும்புகூட விழாமல் பார்த்துக் கொண்டேன். கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும் என்னுடைய கனவில் கலைஞர் வருகிறார். அவரை இப்போது பார்த்துவிட்டு, 'சென்று வருகிறேன்' என்று சொன்னபோது என்னைப் பார்த்து சிரித்தார். அந்த சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. அந்த பார்வையில் ஆயிரம் முழக்கங்கள், அந்தக் கண்ணீரிலும் ஆயிரம் செய்திகள் உள்ளன. அவர் நல்ல நினைவாற்றலுடன் இருக்கிறார். திராவிட இயக்கத்தின் மணியோசைக் குரலாக கருணாநிதியின் குரல் மீண்டும் ஒலிக்கும். செப்டம்பர் 5-ம் தேதி நடக்கும் முரசொலி பவள விழாவில் நான் கலந்து கொள்வேன்" என்று தெரிவித்திருந்தார் வைகோ.

இதையடுத்து, வைகோவின் பெயரைப்போட்டு, 5-ம் தேதி நடைபெறவுள்ள முரசொலி பவள விழா அழைப்பிதழ் அடிக்கப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க கூட்டணிக்குள் வைகோ வந்துவிட்டதாகவே இதர கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பார்க்கிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டு மு.க.தமிழரசு மகன் அருள்நிதியின் திருமண விழாவில் வைகோ கலந்து கொண்டார். கருணாநிதியும் அந்த மேடையில் இருந்தார். இப்போது, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் தி.மு.க. நடத்தும் விழாவில் மேடை ஏறுகிறார் வைகோ. அவரை உள்ளடக்கிய தி.மு.க. கூட்டணியால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடக்குமா என அந்த அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்