வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (01/09/2017)

கடைசி தொடர்பு:21:33 (01/09/2017)

பக்ரீத் பண்டிகையை சுகாதாரமாகக் கொண்டாட நடவடிக்கை! கடையநல்லூரில் புதிய முயற்சி

பக்ரீத் பண்டிகையை சுகாதாரமான முறையில் கொண்டாடும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கடையநல்லூர் நகராட்சியும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இஸ்லாமிய மக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. ஈகைப் பெருநாளான இந்தப் பெருநாளை சுகாதாரமான முறையில் கொண்டாடுவதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பஜார் கிளையின் சார்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பஜார் கிளையின் தலைவர் குறிச்சி சுலைமான் தலைமை வகித்தார். இதில் இஸ்மாயில், சதாம் ஹூசைன், அப்துல் ரஹ்மான், ஜலீல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ’குர்பானி கொடுக்கும்போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செயல்பட வேண்டும்.

பக்ரீத்

குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணிகளின் ரத்தம் தெருக்களில் சிதறிக் கிடக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. அதை மண்ணில் குழிதோண்டிப் புதைக்க வேண்டும். அல்லது பாலித்தீன் விரிப்புகளில் ரத்தத்தை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். இறைச்சிக் கழிவுகளை சாக்கடையில் போடக் கூடாது. இதற்காக தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இலவசமாக பை வழங்கப்படும். அதில் கழிவுகளை சேகரித்து குப்பைத் தொட்டியில் போட வேண்டும்’ என  வலியுறுத்தப்பட்டது. 

அதைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து குர்பானி கொடுக்கும் மக்களுக்கு இலவசமாக பைகள் விநியோகம் செய்யப்பட்டது. கடையநல்லூர் நகராட்சியின் சுகாதார அதிகாரி ஜெயபால் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சக்திவேல் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நகரம் முழுவதும் சென்று அனைத்துக் கிளைகளின் சார்பாக இலவசப் பைகளை வழங்கினர். அப்போது, பொதுமக்களிடம் இதுகுறித்து விளக்கிப் பேசினார்கள். 

நோய் தடுப்பு, முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ள கடையநல்லூர் நகராட்சி மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டினர். கடந்த ஆண்டு இறைச்சிக் கழிவுகள் சாக்கடைகளில் வீசப்பட்டதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது. இதனால் பெருநாளுக்குப் பின்னர் நோய் பரவிய நிலையில், இந்த ஆண்டு அதைத்  தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளைப் பொதுமக்களும் பாராட்டி வரவேற்றனர்.