வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (01/09/2017)

கடைசி தொடர்பு:21:10 (01/09/2017)

நெல்லையில் கருணாஸ் கார் கண்ணாடி உடைப்பு... போலீஸ் தடியடி!

கருணாஸ் ஆதரவாளர் உடைத்த கார்

நெல்லையில் மாமன்னன் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த கருணாஸ் எம்.எல்.ஏ-வின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

சுதந்திரப் போராட்ட வீரரான மாமன்னன் பூலித்தேவன் பிறந்த தினம் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ராஜலட்சுமி, பாஸ்கரன், மாஃபா.பாண்டியராஜன் ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் உள்ள பூலித்தேவன் பிறந்த நெற்கட்டும்செவல் கிராமத்துக்குச் சென்றனர். அங்குள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளும் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதன்படி, முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்களுடன் நெற்கட்டும்செவல் சென்று மாலை அணிவித்தார். பின்னர் அங்கிருந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் திரும்பினார். அந்தச் சமயத்தில் தமிழ்நாடு தேவர் பேரவையைச் சேர்ந்த முத்தையா தேவர் தனது குழுவினருடன் எதிரில் வந்து கொண்டிருந்தார்.

கார் உடைப்பு

நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் கார் வருவதைப் பார்த்த தமிழ்நாடு தேவர் பேரவைத் தொண்டர்கள், கருணாஸை நிற்குமாறு சைகை காட்டினர். ஆனால், அவர் காரை நிறுத்தாமல் சென்றார். அப்போது குருக்கள்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் கண்ணன் என்ற இளைஞர் கருணாஸின் காரை தட்டினார். ஆனாலும் கார் நிற்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் கருணாஸின் கார் கண்ணாடியில் ஓங்கிக் குத்தினார். அப்போது கண்ணாடி உடைந்தது. இதில் ரமேஷ் கண்ணனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. அப்படியும் கருணாஸ் கார் அங்கு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த தகவல் கருணாஸின் ஆதரவாளர்களுக்குத் தெரியவந்ததும் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முத்தையா தேவரின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினர். காரின் அனைத்து கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கிய பின்னரும் ஆத்திரம் தணியாத கருணாஸ் ஆதரவாளர்கள், எதிர் தரப்பினரையும் தாக்கத் தொடங்கினார்கள். இதனால் பெரும் கலவரம் ஏற்படும் நிலைமை உருவானது. 

போலீஸ் தடியடி

இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் வாக்குவாதத்திலும் கைகலப்பிலும் ஈடுபட்டனர். மேலும், லேசாக தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இந்தச் சம்பவத்தால் நெற்கட்டும்செவல் கிராமம் மட்டும் அல்லாமல் சுற்றுப்புறப் பகுதிகளிலும் பதற்றம் நிலவியது. கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ரமேஷ் கண்ணன், ராஜ்குமார், சுரேஷ், கணேசன் ஆகிய 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.