அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டைத் தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.5. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண்கள்  மட்டுமே கிடைத்தது. மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனிதாவுக்கு நீட் தேர்வு பெரும் இடியாக விழுந்தது. நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரும் மனுவை, சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளனர் என்றும், இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையிட்டார். இந்த மனுவில் எதிர் மனுதாரராக அனிதா சேர்க்கப்பட்டார். அப்போது, ''நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல்போகும்; மருத்துவராகும் கனவு பறிபோய்விடும்" என உச்ச நீதிமன்றத்தில் அனிதா மனு அளித்தார். ஆனால், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சலிங் நடைபெற்றது. இதனால் மனமுடைந்த அனிதா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். அனிதாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும். மாணவ, மாணவிகள் இதுபோன்ற விபரீத முடிவை எடுக்க வேண்டாம். மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும் உறுதுணையாகவும் அரசு செயல்படும்' என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!