வெளியிடப்பட்ட நேரம்: 21:33 (01/09/2017)

கடைசி தொடர்பு:21:45 (01/09/2017)

‛கவிஞர் மீராவுக்கு மணிமண்டபம்!’ சிவகங்கை மக்கள் கோரிக்கை

கவிக் குஞ்சுகளை சென்னைக்கு கவிப் பருந்துகளாக அனுப்பியவர் கவிஞர் மீரா. இன்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கவிஞர்களுக்கு வாழ்வு தந்த கோயில் இவரால் ஆரம்பிக்கப்பட்ட அன்னம் பதிப்பகம் அகரம் அச்சகம்தான்.

கவிஞர் மீரா

இப்படிபட்டவர் மறைந்த தினம் இன்று (01.09.2002). இவர் மறைவுக்கு தமிழ் கவிஞர்கள் எழுத்தாளர்கள் கூட்டம் கூடியது. ‛கவிஞர் மீராவுக்கு மணி மண்டபம் கட்டுவோம்’ என்று உணர்ச்சி பொங்க அவரது பூத உடலுக்கு முன்பு சூளுரைத்தார்கள். இன்று வரைக்கும் ஒரு செங்கல் கூட நினைவு மண்டபத்துக்காக எடுத்து வைக்க யாரும் வரவில்லை என்கிற ஆதங்கம் சிவகங்கை மக்களிடம் இருக்கிறது.

இலக்குமி அம்மாள், மீனாட்சி சுந்தரம் தம்பதியின் மகனாகப் பிறந்தவர் மீ.ராஜேந்திரன். பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தாலும் சிவகங்கைதான் இவர்களுக்கு சீமையாக இருந்தது. சிவகங்கையில்தான் பிறந்து வளர்ந்து, பள்ளிப் படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை முடித்தார். தான் படித்த கல்லூரியான மன்னர்துரைசிங்கம் கல்லூரியிலேயே தமிழ்பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். தமிழகத்தில் யாருமே செய்யாத ஒன்றை செய்தார். அதாவது மகாகவி பாரதியாருக்கு நூற்றாண்டு விழா சிவகங்கையில் பத்துநாள்கள் கொண்டாடினார்.

‘அன்னம் விடும் தூது’ என்கிற இலக்கிய இதழ் நடத்தினார். மதுரை காரமராஜர் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டக்குழு தலைவரானபோது தந்தைப் பெரியார், பகத்சிங், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் படைப்புகளை பாடத்திட்டத்தில் இடம் பெறச்செய்தார். 1973-ம் ஆண்டு இவர் எழுதிய கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள் என்கிற நூல்; இலக்கிய வட்டாரத்தில் அதிர்வலையை உண்டாக்கியது. இது காதல் நூல். ஊசிகள் என்கிற நூல் சமூகம் சார்ந்து இருந்தது. இவை இரண்டும் மீராவுக்கு உயர்ந்த இடத்தைத் தேடித் தந்தது.

மீ.ராஜேந்திரன் எப்படி மீராவானார்?

அந்தக் காலத்தில் திராவிட இயக்க மேடைகளில் பாரதிதாசன் பாடல்களுக்கு அடுத்ததாக மீரா எழுதிய

“சாகாத வானம் நாம் 

வாழ்வைப்பாடும் 

சங்கீப்பறவை நாம்  

பெருமை வற்றிப் போகாத நெடுங்கடல் நாம்” 

என்கிற பாடல் ஒலிக்கத்தொடங்கியது. சிவகங்கையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேரறிஞர் அண்ணா கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் மீரா

தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கில்லை;

தெருவோரச் சாக்கடைக்கு வருமா தெப்பம்?’

என்று கவிதை வாசித்தார். இந்த கவிதை அண்ணாவை ரொம்ப ஈர்த்தது. அப்போது அண்ணா சூட்டிய பெயர்தான் கவிஞர் மீரா. அதேபோல் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது ‛கவிக்கோ’ விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விருதை தி.மு.க தலைவர் கருணாநிதி கையால் வாங்கினார். இதுதான் மீரா வாங்கிய கடைசி விருது. அண்ணா பெயர் சூட்டினார்: கருணாநிதி கடைசி விருது வழங்கினார்.

கவிஞர் மீரா குறித்து தமிழாசிரியர் இளங்கோவிடம் பேசும்போது...

“புதுக்கவிஞர்கள், எழுத்தாளர்களின்  சாலைகள் அனைத்தும் சிவகங்கையை நோக்கியே சென்றது. இளைஞர்களை அவர் ஊக்கம், உற்சாகப்படுத்தியதே அதற்குக் காரணம். பிறர் படைப்புகளை வெளியிடுவதில் காட்டும் அக்கறையில் அவருடைய எழுத்துகளை விழுங்கிக்கொண்டவர். இன்று எத்தனையோ கவிஞர்கள், எழுத்தாளர்கள் இருந்தாலும் இளைஞர்களை இலக்கிய வட்டத்துக்குள் கொண்டு வந்தவர் கவிஞர் மீரா.

தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களைத் தேடிபிடித்து அவர்களின் கவிதை கட்டுரைகளை வாங்கி வந்து வெளியிடுவதற்காகவும் அச்சிடுவதற்காகவும் ‛அன்னம்’ பப்ளிகேசன், ‛அகரம்’ அச்சகம் நடத்தினார். இளம் கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கவிஞர் மீரா பல்கலைக்கழகமாகவும் ஒளிச்சுடராகவும் விளங்கியவர் என்றால் யாராலும் மறுக்க முடியாது. மீரா இல்லையெனில் தமிழகத்தில் நவீன கவிஞர்கள் இருந்திருக்க முடியாது என்றே சொல்லலாம். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் குரு. மகாகவி பாரதி தெய்வம். இவர்கள் இருவர் மூலமாக எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் எந்தத் தடையுமின்றி வாழ்ந்தவர்தான் மீரா. தொடக்கத்தில் மரபுக் கவிதைகளை மட்டுமே எழுதி வந்தவர்.

‛என் கனவுகளைப் படித்து என்னைப்போல் எழுதும் புதுக்கவிஞர்களே!  இதோ... உங்களுக்காக மீராவின் கவிதைகள்’ இதிலுள்ள காதல் கவிதைகளோடு நின்று விடாதீர்கள். சமூகம் சார்ந்த சிந்தனை வளர்த்துக்கொள்ளுங்கள். தமிழினம் வீழ்ச்சியுற்றுக் கிடப்பதில் எனக்கு சம்மதமில்லை. எழுந்து நில்லுங்கள்; எழுச்சிக் கொள்ளுங்கள்; புரட்சிக் கொள்ளுங்கள்! என்று  இளம் கவிஞர்களை தட்டி எழுப்பியவர்.

கவிஞர் மீரா ஏராளமான நூல்கள் எழுதியிருக்கிறார். கவிஞர் அப்துல்ரகுமான், சிற்பி நா.காமராசர் போன்ற கவிஞர்கள் மீராவின் நெருங்கிய தோழர்கள். ஆசிரியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ‛மூட்டா’ சங்கத்தின் முன்னோடியாக விளங்கியவர். வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவப்படுத்தினார் இவருடைய தோழர் சிற்பி. ‘கவிக்கோ’ விருது வழங்கி பெருமைப்படுத்தினார் நெருங்கிய நண்பரான அப்துல்ரகுமான். மீராவால் உலகுக்கு அடையாளம் காட்டப்பட்ட கவிஞர்களும் இருக்கிறார்கள். ஆனால், மீராவுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு இவர்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை என்பது கேள்விக்குறியாகவே அமைந்திருக்கிறது.

மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியின் உயராய்வு மையத்துக்கு மீரா பெயர் சூட்ட வேண்டும். சத்தமின்றி சாதனை படைத்ததற்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும். அதே நேரத்தில் அந்தக் கல்லூரி வழியாக செல்லும் சாலைக்கு மீரா பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது சிவகங்கை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக அமைந்துள்ளது’’ என்றார்.

கவிஞர்கள் கனியன்பூங்குன்றனார், ஒக்கூர் மாசாத்தியார், சுத்தானந்தபாரதி, முடியரசன், கண்ணதாசன் போன்ற கவிஞர்களுக்குள் மீராவும் புகழ்பெற்று விளங்கிய கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் சிலை வைக்கும் இந்நாட்டில் புலவனுக்கு மணிமண்டபம் இல்லையா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்