'அனிதா மரணம் தற்கொலையல்ல, நீட் தேர்வுக்கான யுத்தம்' - திருமாவளவன் | Thirumavalavan statement on Anitha's demise

வெளியிடப்பட்ட நேரம்: 08:11 (02/09/2017)

கடைசி தொடர்பு:16:04 (02/09/2017)

'அனிதா மரணம் தற்கொலையல்ல, நீட் தேர்வுக்கான யுத்தம்' - திருமாவளவன்

நீட் தேர்வால் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்ட, அனிதாவின் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அரியலூர் மருத்துவமனைக்குச் சென்று, அனிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

திருமாவளவன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "அனிதாவின் இறப்பு தற்கொலையல்ல. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான மற்றும் நீட் தேர்வுக்கு எதிரான ஒரு யுத்தத்தைத் தொடங்கி வைத்துள்ளார். அது சாவல்ல, தற்கொலையல்ல, ஒரு யுத்தம். நீட் தேர்வுக்கு விலக்களிக்கக் கோரி தமிழக அரசு பல கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பியது. மத்திய அரசு அதை அலட்சியப்படுத்தி ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரி தமிழக அரசு கோரியது. ஆனால், ஒரு ஆண்டுக்கு வேண்டும் என்றால் விலக்களிக்கலாம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இதைத்தொடர்ந்து. தமிழக அரசு ஒரு ஆண்டுக்கு விலக்களிக்கக் கோரும் அவசர சட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது. நீதிமன்றத்தில் இரண்டு நாள்களில் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்படும் என்று கூறிய மத்திய அரசின் வழக்கறிஞர், பின்னர் விலக்களிக்க முடியாது என நீதிமன்றத்தில் கூறியதால் அவசரச் சட்டம் செல்லாததாகிவிட்டது.

திருமாவளவன்

எனவே, இதற்கு நம்பவைத்து கழுத்தறுத்து துரோகம் செய்துள்ள மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். ஓராண்டு விலக்கு கோரும் அவசர சட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். அனிதாவின் இறப்புக்கு நீதிகேட்டு அடுத்தக்கட்ட போராட்டம்குறித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும். தமிழக அரசு, மத்திய அரசின் கெடுபிடிகளுக்கு வணங்கிப் போனதால் வந்த விளைவுதான் இது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய பினாமி அரசாகத்தான் தமிழக அரசு இயங்கி வருகின்றது. உயிரிழந்த அனிதாவின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். தமிழக பாடத்திட்டத்தை மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு மாற்றுவோம் எனக் கூறுவது தமிழக அரசின் பலவீனத்தையே காட்டுகின்றது. மத்திய அரசின் கல்வி வாரியத்தின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மாநில பாடத்துக்குக் கீழ் கொண்டு வரவேண்டும். மத்திய அரசு கல்வி குறித்த அதிகாரத்தை பொதுப்பட்டியலிலிருந்து விலக்கி மாநில அரசுக்கான அதிகாரப் பட்டியலில் இணைக்க வேண்டும்" எனக் கூறினார்.