தடுமாறும் தமிழக அரசு இன்னும் எத்தனை அனிதாக்களை காவு வாங்கவிருக்கிறது?

அனிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்ததில் இருந்து தமிழக அரசு எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்க முடியாமல் தள்ளாடி வருகிறது. அதற்கு உதாரணம்தான் நீட் தேர்வு விவாகரமும், அனிதாவின் தற்கொலையும்...

கனவுகளுடன் தேர்வு எழுதிய மாணவர்கள்

தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு என்பது மாணவர்களுக்கு 11-ம் வகுப்பிலேயே தொடங்கி விடுவதுதான் நிஜம். எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எந்த உயர்கல்விக்குப் போகவேண்டும். அதற்கு 12-ம் வகுப்பில் எத்தனை மதிப்பெண் வாங்கவேண்டும் என்று மாணவர்களும், மாணவர்களை விடப் பெற்றோர்களும் திட்டமிட ஆரம்பித்து விட்டனர். மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும். பொறியியல் கல்லூரியில் சேர வேண்டும், ஐ.ஐ.டி-களில் சேர வேண்டும். ஆடிட்டர் ஆக வேண்டும். கலைக்கல்லூரிகளில் சேர வேண்டும் என்ற திட்டமிடலுடன்தான் கடந்த மார்ச் மாதம் நடந்த 12-ம் வகுப்புத் தேர்வை தமிழக மாணவர்கள் எழுதினார்கள்.

எம்.எல்.ஏ-க்களுக்கு பணிவிடை

குறிப்பாக மருத்துவக் கல்லூரியில் சேரும் கனவுடன் இருந்த மாணவர்களுக்கு நீட் தேர்வுகுறித்த அச்சமும் கூடவே இருந்து வந்தது. ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று போராட்டங்கள் உச்சம் பெற்று அடங்கியபின்னர், அடுத்த கட்டமாக நீட் தேர்வுகுறித்த விவகாரம் எழுந்தது. ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.  அந்த ஓ.பி.எஸ் ஆட்சி, அதற்குப் பின்  நீண்ட நாள்களுக்கு நீடிக்கவில்லை.

அடுத்து வந்தவர் எடப்பாடி பழனிசாமி, அவருக்குத் தம்மைத் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ-க்கள் அணி மாறிவிடக்கூடாது என்ற அச்சமே மேலோங்கி இருந்தது. எனவே, அவர்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி பணிவிடை செய்யவே அவருக்குப் போதுமான நேரம் இருந்தது. அதற்கு அடுத்ததாக அவர் கவலைப்பட்டது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். டி.டி.வி தினகரனுக்கு வெற்றிக் கனியைப் பறித்துத் தர வேண்டும்  (பின்னர் தினகரனின் எனிமியாக மாறியது என்பெதெல்லாம் டெல்லி பிக்பாஸ் கையில் இருந்த பொம்மலாட்ட கயிறு காரணமாகத்தான்) என்ற எண்ணமே அவருக்குப் பிரதானமாக இருந்தது. நீட் தேர்வுகுறித்து எந்த ஒரு தெளிவான முடிவும், கொள்கையும் எடப்பாடியிடம் நிச்சயமாக அப்போது இல்லை.

டெல்லி போனது ஏன்?

அவ்வப்போது நீட் தேர்வுகுறித்து கருத்துத் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நிச்சயமாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் என்று சொன்னார். அவரது வீட்டில் வருமான வரி ரெய்டு நடந்த பிறகு நீட் தேர்வையே அவர் மறந்து விட்டார். வருமான வரி ரெய்டு விவகாரத்தில் மேல் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள டெல்லியில் முகாமிட்டு, பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தார்.

ஆனால், செய்தியாளர்களிடம் சொல்லியது, "நீட் தேர்வில் விலக்குப் பெறுவதற்காகவே டெல்லி வந்தேன்" என்றார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு எந்தவித முயற்சியிலும் ஈடுபடவில்லை என்பதில் இருந்தே, விஜயபாஸ்கர் சொன்னது எவ்வளவு தூரத்துக்கு உண்மை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.  

அ.தி.மு.க அணிகள்

ரெய்டுக்கும், பி.ஜே.பி ஆதரவுக்கும் என்ன தொடர்பு?

12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர், வெற்று வார்த்தைகளாலும், வெற்று வாக்குறுதிகளாலும், தமிழகத்துக்கு விலக்குக் கிடைத்து விடும், கிடைத்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமியும், விஜயபாஸ்கரும் மாறி, மாறிச் சொன்னார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஜே.பி நிறுத்திய வேட்பாளருக்கு பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் என்று மூன்று அணிகளும் ஆதரவு தெரிவித்ததன் மர்மம் என்ன? சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்தியதும், சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் வீட்டில் ரெய்டு நடத்தியதற்கும், ஆட்சியாளர்கள் பி.ஜே.பி-க்கு ஆதரவாக செயல்பட்டதற்கும் சத்தியமாகத் தொடர்பு இல்லைதானே?

குடியரசுத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க அணிகளின் வாக்குகள் அவசியம் என்று மத்திய அரசு எதிர்பார்த்ததைக் கூட தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள திறன் அற்றுப் போய்விட்டன அ.தி.மு.க அணிகள். புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவுக்கு வரிந்து கட்டிக்கொண்டு சென்ற பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் சொன்னதாகச் சொன்னார்கள். அக்கறையுடன் சொல்லி இருந்தால், ஏன் அவர் விலக்கு அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் மோடி அப்படி என்னதான் சொன்னார்?

நம்பிக்கைக்கும், பல்டிக்கும் இடையே...

தி.மு.க நீட் தேர்வு விவகாரத்தில் போராட்டம் நடத்திய அன்று, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்கப்போகிறது எனவும், ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் நினைவு இடத்தைத் திறந்து வைக்க வருகை தரும் மோடி, நீட் தேர்வு விலக்கு குறித்து அறிவிக்கப்போகிறார் என்ற செய்தியை உளவுத்துறையை விட்டு கிளப்பி விட்டீர்களே? அதுவும் மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றத்தானே?

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சொன்னார். அவர் சொன்ன நம்பிக்கை வார்த்தைகளை சத்தியம் என நினைத்து, அவசர சட்ட நகலுடன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும், அதிகாரிகளும் டெல்லி விரைந்தனர். சொன்னபடி கையெழுத்தும் போட்டவர்கள், சுப்ரீம் கோர்ட்டில் நல்ல பிள்ளை போல நடந்துகொண்டு பிக்பாஸ் மத்திய அரசு, தமிழகத்தை ஓரம் கட்டி விட்டது. நிர்மலா சீத்தாராமன் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும். ஏன் மத்திய அமைச்சர்கள் அவசர சட்டத்தில் கையெழுத்துப் போட வேண்டும்? ஏன் சுப்ரீம் கோர்ட்டில் பல்டி அடிக்க வேண்டும்? அவசர சட்டத்தில் கையெழுத்துப் போட்டதற்கும், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்ததற்கும் இடையே முடிவை மாற்றிய நபர் யார்? பிக்பாஸ் மோடி அல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்.

மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு அ.தி.மு.க அணிகளின் ஆதரவு தேவை. குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு அ.தி.மு.க அணிகளின் வாக்குகள் தேவை. பி.ஜே.பி-யை தமிழகத்தில் வளர்த்தெடுப்பதற்கு அ.தி.மு.க அணிகள் தேவை. ஆனால், மருத்துவ உயர் கல்வி என்ற கனவுடன் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் மோடி அரசுக்கு தேவைஇல்லை. அதைத்தான் மோடி அரசு நமக்கு உணர்த்துகிறது. மைனாரிட்டி அரசாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, இப்போது கூட மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ-க்களை சந்தித்துவிட்டு," ஐயா இந்த ஆட்சியை கலைச்சிடாதிங்க" என்று வடிவேலு பாணியில் கெஞ்சிவிட்டு, அந்த இடைவெளியில்தான் அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இப்படி உறுதியற்றுப் போய் மத்திய அரசிடம் அடிபணிந்து கிடப்பதற்கு பதில் ஆட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, வீட்டுக்குப் போகலாமே. வரும் அரசாவது நிலையான அரசாக இருந்து விட்டுப்போகட்டுமே. தள்ளாடி, தள்ளாடி, நிலையில்லாமல்  அனிதா போன்ற இன்னும் எத்தனை உயிர்களை காவு கேட்கப்போகிறீர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!