நீட் தேர்வால் மனம் உடைந்து உயிர்விட்ட மாணவி அனிதாவுக்கு மாணவப் பிஞ்சுகள் அஞ்சலி

நீட் தேர்வு நடைமுறையினால் மருத்துவர் படிப்பில் இடம் கிடைக்காததால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அனிதாவுக்குப் பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.


 

மாணவ பிஞ்சுகள் அஞ்சலி செலுத்தினர்

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்களும், மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் பட்டியலில் 196.5 மதிப்பெண் பெற்றிருந்தார். தமிழக அரசும் அமைச்சர்களும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்காது என நாள் தவறாமல் சொல்லி வந்த வாக்குறுதியால் கூலித் தொழிலாளியின் மகளான அனிதா நிச்சயம் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்தார். நீட் தேர்வு எழுதியவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக அனிதா சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நீட் தேர்வை உறுதிசெய்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், அதிக மதிப்பெண் பெற்ற அனிதாவுக்கு நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டதால் மருத்துவ படிப்பில் சேருவதற்கான இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மனம் உடைந்த அனிதா நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் இந்தத் துயரமான முடிவு மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை எழுப்பி வருகிறது. பல்வேறு இடங்களில் நேற்றிலிருந்து நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதாவின் உயிரிழப்புக்குக் காரணமான மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டிருந்தது. பரமக்குடி அரசுப் பள்ளி ஆசிரியர் சரவணன் உருவாக்கியிருந்த அனிதாவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த இந்த மணல் சிற்பத்துக்கு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் சுற்றி நின்று அஞ்சலி செலுத்தினர். 

 ராமேஸ்வரத்துக்குச் சுற்றுலா வந்த இந்தப் பிஞ்சுக் குழந்தைகள் மறைந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு அங்கு கூடியிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!