சென்னையில் மெடிக்கல் சீட் - கேரள மாணவிக்கு மின்னலாக உதவிய பினராயி விஜயன்!

 

சென்னை அசோக் நகரில் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கேரளத்தைச் சேர்ந்த மாணவி ரேவதி இந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கத் தேர்வாகியிருந்தார். நீட் தேர்வு வழியாக ரேவதிக்குச் சென்னையில் படிக்க இடம் கிடைத்தது. கல்லூரியில் சேர நேற்று கடைசி நாள். நேர்முகத் தேர்வுக்குச் சென்னை வந்திருந்த ரேவதியிடம் தகுதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் இல்லை. அடுத்த முறை வருகையில் தகுதிச் சான்றிதழும் சாதிச் சான்றிதழும் சமர்ப்பிப்பதாக ரேவதியின் பெற்றோர் அதிகாரிகளிடம் மன்றாடினர். 

பினராயி விஜயன் தலையீட்டதால் கேரள மாணவிக்கு இடம்

ரேவதியின் பெற்றோர் அளித்த சமாதானத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கல்லூரியில் சேர நேற்றுதான் கடைசிநாள். இதனால், ரேவதியும் பெற்றோரும் செய்வதறியாது திகைத்தனர். ஏழை மாணவியான ரேவதியின் படிப்புக்குக் கேரள மாநில முந்திரி உற்பத்தி நிறுவனத் தலைவர் ஜெயமோகன் நிதியுதவி செய்துவந்தார். ரேவதியின் பெற்றோர் அவரைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னார்கள்.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டு சென்றார் ஜெயமோகன். கேரள முதல்வர் அலுவலகம் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டது. செப்டம்பர் 4-ம் தேதிக்குள் தகுதிச் சான்றிதல், சாதிச் சான்றிதல் மருத்துக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்தார். இதையடுத்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் ரேவதிக்கு இடம் அளிக்கப்பட்டது. 

ஏழை மாணவியான ரேவதியின் படிப்புக்கு கேரள முந்திரி உற்பத்தி நிறுவனம்தான் உதவி செய்தது. சென்னை ஈ.எஸ்.ஐ மெடிக்கல் கல்லூரியில் சேர்வதற்காக வந்த அவருக்கு சென்னை மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்களும் உதவிசெய்தனர். 

photo courtesy: mathrubhumi

Do you like the story?

Please Appreciate the Author by clapping!