வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (02/09/2017)

கடைசி தொடர்பு:13:53 (02/09/2017)

'தினகரனுக்குக் காத்திருக்கும் 3 அதிர்ச்சிகள்!' - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த வியூகம் #VikatanExclusive

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூன்று அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது, நிச்சயம் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் கொங்கு வட்டாரத்தில்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சி அதிகாரம் கையிலிருந்தும் தினகரன் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்ற வருத்தம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு இருந்துவருகிறது. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 19 எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கும் பதிலளிக்க தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தயாராக உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து தினகரன் பின்வாங்கவில்லை. தினமும் கட்சிப் பதவிகளிலிருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை நீக்கி வருகிறார். இதுபோன்ற செயல்பாடுகள், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் உள்ளன. தினகரனின் கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழக எதிர்க்கட்சிகளும் ஆளுநரைச் சந்தித்தனர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் குடியரசுத் தலைவரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன்

ஏற்கெனவே, தமிழக எதிர்க்கட்சி எம்.பி-க்கள் குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசியுள்ளனர். எதிர்க்கட்சி எம்.பி-க்களின் கோரிக்கைகளுக்கும் குடியரசுத் தலைவரிடமிருந்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், நாள்தோறும் தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பாகவே காணப்படுகிறது. ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை சமாளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில், ' ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை கவிழ்ப்பதற்கு சிலர் முயல்கிறார்கள். அதற்கு நாம் துணை போய்விடக் கூடாது' எனக் கூறியதோடு, சில வாக்குறுதிகளையும் கொடுத்தாகத் தகவல் பரவியுள்ளது.

முதல்வரின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்க சசிகலா குடும்பத்தினரும் தயாராக உள்ளனர். தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை கொடுக்க வேண்டும் என்ற ஆலோசனையில் சசிகலா குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது, நம் பக்கம் உள்ள ஆதரவு எம்.எல்.ஏ-க்களை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யச் சொல்லலாம் என்று சசிகலா குடும்பத்தில் உள்ள முக்கியமானவர் கூறியிருக்கிறார். இதற்கு சில எம்.எல்.ஏ-க்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிராக முடிவெடுக்க உள்ளனர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர். இதில், நம் ஆட்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என தினகரன் அறிவுறுத்தியுள்ளதை முக்கிய உத்தரவாகப் பார்க்கின்றனர் நிர்வாகிகள்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

"அ.தி.மு.க விதிப்படி பொதுக்குழுவை நடத்தும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு நடத்தப்பட்ட பொதுக்குழுவில் சசிகலா, பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நியமன விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தல் ஆணையம் முடிவை அறிவித்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கையை அ.தி.மு.க அம்மா அணியினர் மேற்கொள்ள முடியும். மேலும், அ.தி.மு.க-வை இரண்டு அணிகளாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரட்டை இலைச் சின்னமும் முடக்கப்பட்டுள்ளது. இதனால், செப்டம்பர் 12-ம் தேதி நடத்தப்படும் பொதுக்குழு அ.தி.மு.க.வுக்கு தொடர்பில்லாதது. தற்போதுள்ள சூழ்நிலையில் இரண்டு அணிகளும் இணைந்துவிட்டதாகச் சொல்லப்பட்டாலும் அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முழுமையடையவில்லை. இரண்டு அணிகளில் ஓர் அணியின் பொதுச் செயலாளராக சசிகலா இருக்கிறார். சசிகலாவின் பொதுச் செயலாளராக இருக்கும்பட்சத்தில் யாருக்கும் பொதுக்குழுவை நடத்தும் அதிகாரம் இல்லை என்பதில் உறுதியாக உள்ளோம். சசிகலாவுக்கு எதிராக செப்டம்பர் 12-ல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினாலும் அதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. இதற்கு மேலும் முடிவெடுத்தால், சட்டரீதியாக அதை எதிர்கொள்வோம்" என்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் சட்ட ரீதியாக தயாராகி வருகிறது. தினகரனுக்கு செக் வைக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தினகரனுடன் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்காகத்தான் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த நடவடிக்கை அரசுக்கு எதிராகப் பேசும் எம்.எல்.ஏ. ஒருவரின் குற்றப்பின்னணி குறித்த ரிப்போர்ட் தயாராகிவருகிறது. அதன் அடிப்படையில் அந்த எம்.எல்.ஏ. மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அடுத்து, தேர்தல் ஆணையம், சசிகலாவின் நியமனம் செல்லாது என்ற அறிவிப்புக்காக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் காத்திருக்கின்றனர். அதற்காக அந்த வழக்கை விரைந்து முடிக்க டெல்லியிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் 19 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த மூன்று நடவடிக்கைகளே சசிகலா குடும்பத்தினருக்கு இப்போதைக்குப் போதும் என்று கருதுகின்றனர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்.