Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதா மரணத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு... நெல்லையில் நூதனப் போராட்டம்!

அனிதா மரணத்துக்கு எதிர்ப்பு

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதால் மத்திய மாநில அரசுகள் மீது ஆத்திரம் அடைந்த மாணவர்களும் இளைஞர்களும் நெல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா, அதிக மதிப்பெண் பெற்ற நிலையிலும் நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பை இழந்தார். இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டதால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. மத்திய, மாநில அரசுகளின் தவறான நடவடிக்கை காரணமாகவே மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதாக இளைஞர்களும் மாணவர்களும் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நெல்லையிலும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் மார்க்ஸிஸ்ட் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் ஏராளமான கம்யூனிஸ்ட் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அனிதாவின் சாவுக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என கோஷமிட்டனர். அவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம் அமைப்பினர் நெல்லை சந்திப்புப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி கோஷங்களை எழுப்பினார்கள். அத்துடன், மத்திய மாநில அரசுகள் அனிதாவைக் கொலைசெய்து விட்டதாகவும், பிரதமருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் கைதுசெய்ய வந்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். 

இதனிடையே, பாளையங்கோட்டை ஜவஹர் திடல் அருகில் சமூக ஆர்வலர் குயிலி தலைமையில் சில பெண்களும் ஆண்களும் திரண்டனர். அவர்கள் அனிதா போன்று இறந்து கிடப்பதாக தத்ரூபமாக நடித்துக்காட்டினர். சாலையோரத்தில் மாலையுடன் உயிரிழந்தது போல் கிடந்த உடல்களையும் அதைச் சுற்றிலும் இருந்து பெண்கள் ஒப்பாரி வைத்ததையும் பார்த்து வாகனங்களில் சென்றவர்கள் நிறுத்திப் பார்த்தார்கள். மாணவி அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டு இந்த நூதனப் போராட்டம் நடப்பதைக் கண்ட பொதுமக்களும் இதில் பங்கேற்றதால் கூட்டம் அதிகமாகத் திரண்டது. 

அனிதா மரணம்

இதுபற்றி அறிந்ததும் அங்கு போலீஸார் திரண்டார்கள். அவர்களால் சாலையில் செல்வோருக்கோ அல்லது போக்குவரத்துக்கோ எந்த இடையூறும் ஏற்படவில்லை. இருப்பினும் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக அவர்களைப் போலீஸார் கைதுசெய்தனர். பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் மாணவர்களும் இளைஞர்களும் திரள இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததால் அதைத் தடுக்கும் வகையில் வ.உ.சி மைதானத்தைப் போலீஸார் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement