வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (02/09/2017)

கடைசி தொடர்பு:14:36 (02/09/2017)

தமிழகத்தின் புதிய கவர்னர் ஆகிறாரா கல்ராஜ் மிஸ்ரா?!

கல்ராஜ் மிஸ்ரா

த்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகவிருக்கும் பி.ஜே.பி. மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக கவர்னராக இருந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் டாக்டர் கே.ரோசய்யாவின் பதவிக்காலம் 2016 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது. ரோசய்யாவுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நிறைவேறாமல் போனதில், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு மீது சற்றே வருத்தம்தான். இருந்தாலும், தமிழகத்தின் கூடுதல் பொறுப்பைக் கவனிக்கும் கவர்னராக நியமிக்கப்பட்ட வித்யாசாகர் ராவ் பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருக்கும் சி.எச். வித்யாசாகர் ராவை, தமிழக பொறுப்பு ஆளுநராக மத்திய அரசு அப்போது நியமித்தது. இதையடுத்து, கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வித்யாசாகர் ராவ், கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி, தமிழக பொறுப்பு ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் ஜெயலலிதா தவிர, அவரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களும் கலந்துகொண்டனர். 

இதனிடையே, 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 75 நாள்களுக்குப் பின்னர் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வித்யாசாகர் ராவ், இரண்டுமுறை அப்போலோவுக்குச் சென்று அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு தமிழகத்தில் நடந்த அத்தனை அரசியல் களேபரங்களுக்குப் பிறகும் மாநிலத்துக்கு நிரந்தர கவர்னரை மத்திய அரசு இதுவரை நியமிக்கவில்லை. பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் வெறும் 58 நாள்களே வந்து தனது பணிகளைக் கவனித்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.

மகாராஷ்டிரா போன்ற ஒரு பெரிய மாநிலத்தின் ஆளுநராகப் பதவியில் இருப்பவரால் தமிழகம் போன்ற மற்றொரு பெரிய மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பையும் சேர்த்துக் கவனிப்பது இயலாத காரியம். ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது, சசிகலா குடும்பத்தினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். ராஜினாமா, சசிகலாவை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விட வேண்டும் என்று சசிகலா கோரிக்கை, தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யச் சொன்னதாக ஓ.பி.எஸ். புகார், கூவத்தூர் ஆடம்பர விடுதியில் எம்.எல்.ஏ-க்களை தங்கவைத்தது, சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றது, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் பேரவையில் நடந்த களேபரம் என பல்வேறு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறிய போதிலும் மத்திய அரசு நிரந்தர கவர்னரை நியமிக்கும் விவகாரத்தில் அசைந்து கொடுக்கவில்லை.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்வதற்கு ஏதுவாக, பிரதாப் ரூடி ஏற்கெனவே பதவி விலகியிருக்கிறார். மேலும், கல்ராஜ் மிஸ்ரா, உமா பாரதி உள்ளிட்ட மேலும் சிலரும் தங்கள் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அமைச்சரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் அமைச்சராக இருப்பவர் கல்ராஜ் மிஸ்ரா. பி.ஜே.பி-யின் மூத்தத் தலைவராக உள்ள இவருக்கு ஆளுநர் பொறுப்பு வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக முன்னாள் ஆளுநரான ஹெச்.ஆர். பரத்வாஜ், தற்போது தீவிர பி.ஜே.பி. ஆதரவாளராக உள்ளார். தமிழக ஆளுநர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர் இருந்தாலும், பரத்வாஜை ஆளுநராக நியமிப்பதில் பி.ஜே.பி-க்கு தயக்கம் உள்ளது. எனவே, கல்ராஜ் மிஸ்ராவை தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கல்ராஜ் மிஸ்ராபி.ஜே.பி. மூத்த தலைவரான கல்ராஜ் மிஸ்ரா, உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மக்களவைத் தொகுதியில் இருந்து 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உத்தரப்பிரதேச மாநில பி.ஜே.பி. தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் காஸிப்பூர் மாவட்டம் மாலிக்பூர் பகுதியைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி-யின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டவர். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட மிஸ்ரா, பாரதிய ஜனதாக் கட்சியின் இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சாவின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற பெருமையைப் பெற்றவர்.

76 வயதான கல்ராஜ் மிஸ்ராவை தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிப்பதன் மூலம் தற்போதைய அரசியல் சூழ்நிலையை சற்றே சீர்செய்யலாம் என்று பி.ஜே.பி. தலைமை கருதுகிறது. மேலும், வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் நிரந்தர ஆளுநர் இல்லாவிட்டால், அது தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்ற நோக்கிலும் நிரந்தர ஆளுநரை நியமிக்க பி.ஜே.பி முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் ஆளுநர் பதவிக்கான போட்டியில் ஏற்கெனவே குஜராத் மாநில முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் உள்பட பலரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. ஆனால், இப்பதவிக்கு கல்ராஜ் மிஸ்ராவே சரியான நபராக இருப்பார் என்று பி.ஜே.பி. கருதுவதாகத் தெரிகிறது. எனினும், ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம் பற்றிய அறிவிப்பு, மத்திய அமைச்சரவை மாற்றத்துக்குப் பின்னர், அடுத்த சில தினங்களில் வெளியாகக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்