Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேலம் - சென்னை ரயில் கொள்ளை : துப்புக் கொடுத்தால் ரூ.2 லட்சம்!

சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு, எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வரப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக் கட்டுகளை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் சென்ற ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. 

ரயில்

ரயிலின் மேற்கூரையை வெல்டிங் மூலம் உடைத்து 16 பெட்டிகளில் இருந்த ரூ.5.75 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது.  இந்த நிலையில் ரயிலில் கொள்ளை அடிக்கப்பட்ட பழைய நோட்டுகள் சம்மந்தப்பட்ட வழக்கு குறித்து தகவல் அளிப்போருக்கு 2 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் எனத் தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி வெளியிட்டுள்ள அறிக்கையில், 8.8.2016 அன்று சேலத்திலிருந்து சென்னை வந்த சேலம் - சென்னை விரைவு ரயில் பார்சல் வேனில் எடுத்துவரப்பட்ட பணத்தில், 5.78 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கு தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் தீவிரப் புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு குறித்து பொதுமக்களிடமிருந்து அவ்வப்போது கடிதங்கள் மற்றும் தொலைபேசி, கைப்பேசி மூலமாகவும் தகவல்கள் பெறப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு பெறப்பட்ட தகவல்களைக் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை தீவிர விசாரணை செய்துவந்துள்ளது. 

இந்த வழக்கில் துப்பு துலக்க பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பண வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்த பயனுள்ள தகவல்களை தொலைபேசி, கைப்பேசி மற்றும் வாட்ஸ்அப் மூலமாக அளிக்க முன் வருமாறு பொதுமக்கள் வேண்டப்படுகின்றனர். தகவல் அளிக்கும் நபர் தங்களைப் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டியதில்லை. மேலும், தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என உறுதி அளிக்கப்படுகிறது. 

இந்த வழக்கு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு என 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளக்கூடிய கீழ்க்கண்ட பிரத்யேக தொலைபேசி, கைப்பேசி மற்றும் வாட்ஸ்அப் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

தொலைப்பேசி எண்: 044 2851 1600 

கைப்பேசி/வாட்ஸ் அப் எண்கள்: 99400 22422/ 99400 33233 

மேற்படி அறிவிப்பு குறித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement