நீட் தேர்வு முறையைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்! | College students holds protest against Neet exam

வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (02/09/2017)

கடைசி தொடர்பு:15:52 (02/09/2017)

நீட் தேர்வு முறையைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

   

நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனிதாவின் மரணத்துக்குக் காரணமான மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்ககை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அனிதாவின் மரணத்தை ஏற்படுத்திய நீட் தேர்வு முறையை ரத்துசெய்ய வேண்டும் என்று கோஷமிட்டார்கள்.  கல்லூரியை விட்டு சாலையில் வந்து போராடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். நீங்கள் அனுமதி வாங்கிவிட்டு போராடுங்கள் என்று போலீஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்குள்ளாக போலீஸ் வேன்கள் போலீஸ் எனப் பட்டாளமே குவிக்கப்பட்டது. அதன்பிறகு கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த ஆரம்பித்தார்கள் மாணவர்கள். போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் ஒரு டீம் காத்திருக்கிறது. எந்த நேரம் வேண்டுமானாலும் இவர்கள் கைதுசெய்யப்படலாம்.

இந்நிலையில், இந்தப் போராட்டக்களத்தில் உள்ள மாணவர்களிடம் பேசும்போது.. "ஒரு கூலித் தொழிலாளியின் பிள்ளை இந்த நாட்டில் கஷ்டப்பட்டுப் படித்து அதிகமான மதிப்பெண் பெற்று தான் கண்ட டாக்டர் கனவை அடையக்கூடிய தகுதி இருந்தும் மத்திய அரசின் நீட் தேர்வு முறையால் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். மேல் தட்டு மக்களுக்காகக் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு முறை இது. தற்கொலை செய்யும் அளவுக்கு நம்முடைய அரசாங்கத்தால் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டிருக்கிறார் அனிதா.

இவரின் மரணத்தால் நீட் தேர்வுக்குத் தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக அரசு கல்வித்துறையில் மற்றவர்களோடு போட்டி போடும் அளவுக்குத் தகுதியான கல்வி முறையைக் கொண்டுவராததுதான் இந்த மரணத்துக்கு முதல் காரணம். ஆகத் தகுதி இருந்தும் தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதால்தான் இப்படியொரு முடிவை அனிதா எடுத்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் வரை சென்றும் நீதி கிடைக்கவில்லை. மாநில அரசின் கல்வி உரிமையில் மத்திய அரசு தலையிடக்கூடாது. தமிழகத்தில்தான் அதிகமான மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன. இங்கெல்லாம் இனிமேல் வடஇந்தியர்களின் பணக்காரர் பிள்ளைகள்தான் படிப்பார்கள். தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். மத்திய அரசு மாணவர்களின்  புரட்சியைத் தமிழகத்தில் அவ்வப்போது சீண்டிப்பார்க்கின்றது” என்று கொதித்தெழுகிறார்கள் போராட்டக்களத்தில் இருக்கும் மாணவர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க