“எம்.ஜி.ஆர் சத்துணவு போட்டார்... எடப்பாடி பழனிசாமி பட்டினி போட்டார்!” திருவள்ளூர் அதிர்ச்சி


                              எம்.ஜி.ஆர். பெயரால் அமைந்த எடப்பாடி  அரசின் பள்ளிமாணவர்கள்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாட மாணவர்களை பட்டினி போட்டிருக்கிறது ஆளும்  எடப்பாடி பழனிசாமி அரசு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது... மூன்றுநாட்கள் பள்ளியை பூட்டியதால், கல்வியோடு, தினமும் கிடைக்கும் இரண்டுவேளை சோறும் எங்களுக்கு கிடைக்காமல் போயிருக்கிறது... என்ற ஆதங்கக் குரல், மாணவர்களிடம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. மாணவர்களின் சோற்றிலும், கல்வியிலும் கைவைத்தவர்கள், மாண்புமிகு மந்திரிகளும், கல்வியாளர்கள் நிரம்பிய மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களும்தான்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடக்கவுள்ள அரசு எம்.ஜி.ஆர். நூற்றூண்டு விழாவை சிறப்பாக்க, பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை இழுத்துப் பூட்டிவிட்டு விழா வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துள்ளனர், ஆளுங்கட்சியினர்.  மந்திரிகள் மாஃபா. பாண்டியராஜன், பா.பெஞ்சமின், தொகுதி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் ஆகியோர் கட்சியின் இரு அணிக்கான பலத்தைக் காட்ட  இந்த விழாவை  சிறப்பாக செய்து முடித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து எம்.ஜி.ஆர்.விழா சிறக்க  வேலை பார்த்துள்ளனது. 

                        மாணவர்களை பட்டினி போட்ட அந்தப் பள்ளி 

கடந்த 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இதற்காகவே பூட்டப்பட்டிருக்கிறது அரசுப்பள்ளி. அடுத்து வந்த நாளும் அரசு விடுமுறைநாளான 'பக்ரீத்' பண்டிகை நாளாகி விட்டது. அதற்கடுத்த நாளும், ஞாயிற்றுக்கிழமை என்று வரிசை கட்டியிருக்கிறது, விடுமுறை. 'விழாவுக்கான கட்-அவுட்களை  வைக்க அந்தப் பள்ளியில்தான் இடம் விசாலமாக இருக்கிறது' என்று அங்கே கொண்டுவந்து அவைகளை பாதுகாப்பாக வைத்து மாணவர்களை வெளியேற்றியுள்ளனர், கல்வியாளர்கள். இதுகுறித்து அந்தப்பள்ளி மாணவர்கள் கூறும்போது, “எங்களுக்கு முன்றுநாள் கல்வி மட்டும் போகவில்லை, மூன்றுநாளிலும் இரண்டுவேளை சோறும் கைவிட்டுப் போயிருக்கிறது... பள்ளிக்கு வந்தால் சோறு கிடைக்குமே என்று வருகிற பல நூறு மாணவர்கள் இங்கு படித்துக் கொண்டிருக்கிறோம்" என்றனர். அரியலூர் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கியிருப்பது இந்த திருவள்ளூர் மாவட்டம்தான். கல்விக்காக மதிய உணவு திட்டம் கொண்டுவந்த காமராஜரும், அதை விரிவுபடுத்தி சிறப்பாக்கிய எம்.ஜி.ஆரும் ஆட்சி செய்த நாடு இது... நல்லவேளை இவர்கள் இருவருமே இப்போது இல்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!