கோவை, திருப்பூரில் இல்லாதவர்க்கு இயன்றதைச் செய்யும் ‛அன்புச் சுவர்!’ | Wall of kindness...!

வெளியிடப்பட்ட நேரம்: 10:13 (03/09/2017)

கடைசி தொடர்பு:10:18 (03/09/2017)

கோவை, திருப்பூரில் இல்லாதவர்க்கு இயன்றதைச் செய்யும் ‛அன்புச் சுவர்!’

சில வருடங்களுக்கு முன்பு வரை, யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் எங்கிருந்தோ கிளம்பி வந்து நம் வீட்டுத் தெருக்களில் வீடு வீடாகச் சென்று பழைய துணிமணிகளைச் சேகரித்துக்கொண்டிருப்பார்கள். குழந்தைகள் காப்பகம், அதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் என எங்கோ இருக்கும் யாரோ சிலருக்கு அந்தத் துணிகள் பயன்பட்டுக்கொண்டிருக்கும். அதேபோல நம் வீட்டில் சமைக்கப்படும் உணவு வகைகள், உரிமையோடு எதிர் வீட்டார் இல்லத்துக்கும் போய்ச் சேரும். இதுபோன்ற சில தன்மையான தருணங்களை எல்லாம் தொலைத்துவிட்டு, இப்போது உலகமயமாக்கலால் உந்தித் தள்ளப்பட்ட நகர வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்.

பொருளீட்டும் சமூகத்தில் கடிவாளம் அணிந்தவாறு உழைத்துக்கொண்டிருக்கும் இந்தக் கால சந்ததியினருக்கு, மேற்கூறிய தருணங்கள் எல்லாம் அந்நியமாகத் தெரியலாம். `நமக்குத் தேவையில்லை என நினைப்பதை, எப்படி மற்றவர்களுக்குக் கொடுப்பது? தவறாக நினைக்க மாட்டார்களா?' என்ற தயக்கம்தான் முழுமையாக ஆட்கொண்டுவிடுகிறது. இப்படித் தயங்கித் தயங்கியே மனிதாபிமானத்தை மறந்துகொண்டிருக்கும் மனிதர்களை அன்பால் அரவணைத்து, ஆதரவற்றோருக்கு உதவவைக்கிறது இந்த ‘அன்புச் சுவர்’.

அன்புச் சுவர்

திருப்பூர் பழனியம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் சுற்றுச் சுவரில் அமைக்கப்பட்டிருப்பதுதான் இந்த அன்புச் சுவர். நமக்கு வேண்டாம் என ஒதுக்கும் எந்த ஒரு பொருளையும் இந்த அன்புச் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் பெட்டிகளில் வைத்துவிட்டுச் செல்லலாம். அதன் தேவை உள்ள நபர்கள் அதை எடுத்துப் பயனடைவார்கள்.

ஆடை தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற திருப்பூர் மாநகரில், அணிவதற்கே ஆடையின்றி எத்தனையோ மனிதர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த அன்புச் சுவர் ஆடைகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை உணவுக்கே பணமின்றி பரிதவிக்கும் மனிதர்களுக்கு, இந்த அன்புச் சுவர் உணவுப் பொட்டலங்களை தானமாக வழங்குகிறது. சாலையோரக் குப்பைத்தொட்டிகளில் கிழிந்துபோன ஒற்றைக் காலணியைத் தேடும் மனிதர்களுக்கு, இந்த அன்புச் சுவர் சீரான காலணிகளையும் வாரி வழங்குகிறது.

இப்படி ஆடைகள், புத்தகங்கள், உணவுகள், காலணிகள் என நம்மிடம் வீணாக இருக்கும் ஒவ்வொன்றும், இந்த அன்புச் சுவரின் மூலம் ஆதரவற்றோரின் கைகளில் பரிசுப் பொருள்களாகச் செல்லும் வாய்ப்பைப் பெறுகிறது. பயன்படுத்திய பழைய பொருள்கள் மட்டுமல்ல, இங்கு வைப்பதற்காகவே விலை கொடுத்து புதிய பொருள்களையும் வாங்கி வந்து வைத்துவிட்டுச் செல்கின்றனர், எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் படைத்தோர். தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல், தன்னால் முடிந்த உதவியைச் செய்ய நினைக்கும் மனிதர்களை வாரி அணைத்துக்கொள்ளும் இந்த அன்புச் சுவரை திருப்பூரில் உருவாக்கியவர்கள், `இனி ஒரு விதி செய்வோம்' என்ற தனியார் அறக்கட்டளை அமைப்பினர்.

அன்புச் சுவர்

அறக்கட்டளையின் தலைவர் கவிதாவிடம் பேசினோம்...

“அறக்கட்டளை என்றதும், ஏதோ 50 நபர்கள் இணைந்து நடத்துகிறார்கள் என நினைத்துவிட வேண்டாம். நானும் என் குடும்ப நண்பர்கள் சிலரும் சேர்ந்துதான் இதைச் செய்துவருகிறோம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கோவைதான். என் குடும்பத்தில் அனைவருமே சேவை மனப்பான்மை அதிகம்கொண்டவர்கள். அவர்களைப் பார்த்தே வளர்ந்த எனக்கும் அந்தப் பழக்கம் ஒட்டிக்கொண்டது. பள்ளிக்குச் செல்லும் பருவத்தில் இருந்தே ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் எனக் கனவுகண்டேன். ஆனால், அதைச் சாத்தியமாக்க முடியவில்லை. இருந்தாலும், நம்மால் முடிந்த பொதுச்சேவைகளைச் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. எனவே, அவ்வப்போது சிறிய அளவில் சேவைகளைச் செய்துவந்தேன். கல்லூரிப் படிப்பை முடித்ததும் திருமணமாகி திருப்பூருக்கு வந்த பிறகு, கணவன், குழந்தைகள் என, குடும்பக் கடமைகளில் நான் முழு ஈடுபாட்டுடன் இயங்கிக்கொண்டிருந்த தருணம், தாய்மையின் அனுபவம், எனக்குள் ஆதரவற்ற மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது.

அன்புச் சுவர்

தங்குவதற்கு வீடு இல்லாமல் சாலையோரங்களில் வசிக்கும் மக்களில், தினமும் 10 பேருக்காவது உணவு அளிக்க வேண்டும் என முடிவெடுத்து, தொடர்ந்து செய்துவந்தேன். குடும்பத்தினருக்குச் சமைக்கும்போதே 10 பேர் சேர்த்து சாப்பிடும் அளவுக்கு உணவு தயாரித்துக்கொள்வேன். தினமும் எங்கெங்கோ இருக்கும் ஆதரவற்றவர்களை தேடிச் சென்று உணவுப் பொட்டலங்களை வழங்கினேன். இப்படி ஒவ்வோர் இடமாகத் தேடிச்சென்று உணவு வழங்குவதைவிட, இந்த முயற்சியைச் சரியாக நடைமுறைப்படுத்தினால், நம்மைப்போலவே ஆதரவற்றவர்களுக்கு உதவ நினைப்பவர்களும் அதைப் பயன்படுத்தி உதவ முன்வருவார்களே என்ற யோசனை உதித்தது. வெளிநாடுகளில் இருப்பதைப் போன்றே தெருவோர உணவு வங்கியை திருப்பூரில் அமைக்கலாம் என முடிவுசெய்தேன். அதற்காக நான் நடத்திவரும் ஆன்லைன் ஆடை விற்பனை நிறுவனம் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை இந்தச் சேவைக்காக ஒதுக்கினேன். என் கணவரும் நண்பர்களும் எனக்கு பக்கபலமாக நின்றார்கள்.

திருப்பூரில் மொத்தம் நான்கு இடங்களில் உணவு வங்கி திறக்கப்பட்டது. உணவு தேவைப்படும் ஆதரவற்றோர், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து உணவை எடுத்துக்கொள்ளலாம். உணவு அதிகமாக இருக்கிறது என நினைக்கும் நபர்கள் அதைக் கொண்டுவந்து அந்தக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டுச் செல்லலாம். இந்த முயற்சி, சற்றும் எதிர்பாராத வகையில் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. வீட்டில் தாங்கள் சாப்பிட்ட பிறகு மீதமாகும் உணவைக் கொண்டுவந்து வைப்பவர்களைவிட, இதற்காகவே புதியதாகத் தயாரித்தும் ஹோட்டல்களில் வாங்கியும் வந்து வைத்துவிட்டுச் சென்றார்கள் திருப்பூர் மக்கள்.

அன்புச் சுவர்

உணவோடு இதை நிறுத்திவிடக் கூடாது. எவற்றை எல்லாம் மக்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள முடியுமோ, அவை அனைத்தையும் பரிமாறிக்கொள்ளும் வகையில் ஒரு திட்டத்தை உருவாக்கலாம் என முடிவுசெய்தோம். அப்போதுதான் நெல்லை மாவட்டத்தில் `அன்புச் சுவர்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி. அங்கு மாவட்ட நிர்வாகம் செய்ததை, இங்கு நாம் முன்னெடுத்துச் செய்ய வேண்டும் என நினைத்தோம். அப்போதுதான் `இனி ஒரு விதி செய்வோம்' என்ற பெயரில் அறக்கட்டளையைப் பதிவுசெய்து உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன், முதன்முறையாக பவானி அருகே உள்ள குமாரபாளையத்தில் இந்த அன்புச் சுவர் திட்டத்தைத் தொடங்கினோம். மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பூர் மாநகராட்சி அனுமதியுடன் பழனியம்மாள் அரசுப் பள்ளி அருகே ஓர் அன்புச் சுவரை எழுப்பினோம். மக்கள் அதிகமாகக் கடந்து செல்லும் பகுதி என்பதால், இடமே நிரம்பி வழியும் அளவுக்கு பொருள்களைக் கொண்டுவந்து வைத்துச் செல்கிறார்கள் மக்கள். ஆதரவற்றவர்கள் அதை மகிழ்ச்சியோடு எடுத்துச் செல்வதைப் பார்க்கவே அவ்வளவு மனநிறைவாக இருக்கிறது.

இப்போது கோவையில் ஓர் அன்புச் சுவரை எழுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. முகநூலில் இதைப் பார்க்கும் வெளிநாடுவாழ் தமிழர்கள் பலரும், செல்போனில் அழைத்து இந்த முயற்சியைப் பாராட்டுகிறார்கள். பல அரசுப் பள்ளிகளில் என்னை அழைத்து, சமூகச் சேவை பற்றி மாணவர்களிடத்தில் உரையாற்றச் சொல்கிறார்கள். இதை என்னுடைய சாதனையாகப் பார்க்க வேண்டாம். அன்பால் உதவ முன்வரும் அனைவருக்கும் இந்த அன்புச் சுவர் ஒரு பாலமாக இருக்கும்" என்றார்.

மனிதநேயம் இன்னும் மறித்துவிடவில்லை என்பதற்கு, இந்த அன்புச் சுவர் எளிய உதாரணம்!


டிரெண்டிங் @ விகடன்