'வேடிக்கை பார்க்காதே... போராட வா!' - அனிதாவுக்காகக் கொந்தளித்த கோவை #RIPAnitha

அனிதாவுக்கு நீதிகேட்டு கோவையில் போராட்டம்

அரியலூர் அனிதாவின் பெயரை உச்சரித்தபடி தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது. அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டும்,  நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும்  நடக்கும் தொடர்போராட்டங்களால் விழிபிதுங்குகிறது தமிழகம்.

அரசுப்பள்ளியில் படித்து, 1176 மதிப்பெண் எடுத்த ஏழை மாணவி அனிதாவின் மருத்துவக் கனவை மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வு பறித்தது. மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த விரக்தியில், மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்கக் கோரி, கோவையில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு, கோவையில் முற்போக்கு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கறுப்புத் துணிகளால் கண்களைக் கட்டியபடி நீதிமன்ற வளாகத்திலிருந்து செஞ்சிலுவை சங்கம் வரை ஊர்வலம் சென்றனர். அனிதா மரணத்துக்கு மத்திய பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகளின் துரோகமே காரணமென வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.

அடுத்ததாக, கோவை ரயில் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கத்தினரும், ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் ரயில் மறியலில் ஈடுபட முயன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்கள். காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் திடீரென்று அங்குள்ள பி.ஜே.பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.


இதேபோல மாணவி அனிதா மரணத்துக்கு நீதிகேட்டு, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனிதாபோல மாணவர்கள் தற்கொலைகளைத் தடுக்க, நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டுமென அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.

கோவை  நஞ்சப்பா ரோட்டில் புதிதாகக் கட்டப்படும் மேம்பாலத்தின் மீது ஜல்லிக்கட்டு ஆதரவுக்குழுவினர் அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டும் கோஷங்களை எழுப்பிய வண்ணம் மேம்பாலத்தின் மீது  ஊர்வலமாகச் சென்றனர். மாணவர்கள் காந்திபுரம் கிராஸ் கட் ரோடு அருகே வந்தபோது பாலத்தின் மீது இருந்து பொதுமக்களிடம் "வேடிக்கை பார்க்காதீர்கள்! தெருவில் இறங்கி போராட வாருங்கள்" என அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் போராடிய மாணவர்களை, போராட்டத்தைக் கைவிட்டு கைதாகுமாறு கூறினர். இதை ஏற்காத மாணவர்கள் காவல்துறையினரிடம், வ.உ.சி மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி தாருங்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இன்று அனிதாவுக்கு ஏற்பட்ட நிலை, நாளை யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அமைதியாகப் போராடினால் குண்டர் சட்டத்தைப் போடும் தமிழக அரசு நீட்டுக்கு விலக்கு அளிக்க முடியாத நிலையில் இருப்பதாகக் குற்றம் சாட்டினர்.

மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால்தான் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதாகவும் குற்றம்சாட்டினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!