வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (02/09/2017)

கடைசி தொடர்பு:17:30 (02/09/2017)

சென்னையில் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி!

anitha, அனிதா

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா, நேற்று தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், அனிதா தற்கொலைக்குக் காரணமான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை சிந்தாதிரிப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் முன்பிலிருந்து முழக்க அட்டைகள், கொடிகளுடன் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஊர்வலமாக வந்தனர். அதில் சிலரை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பே போலீஸார் கைது செய்தனர். அவர்களை மீறி வந்த மற்ற போராட்டக்காரர்கள் சென்னை ஓமந்தூரார் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அருகே போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மாணவர்களுடன் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். தமிழகம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

அனிதா, anitha

தற்போது, அம்மருத்துவமனையில் நீட் தேர்வின் மூலம் கலந்தாய்வு  நடந்துகொண்டிருக்கும் நிலையில் அங்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மருத்துவமனை வாசலில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், சிலரைத் தாக்கினர். பின்னர், அந்த அமைப்பைச் சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனால், அந்த இடத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் புதுப்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள  வீரபத்திரன் தெரு சமூக நலக்கூடத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.