'அனிதாவின் கனவை காலம் கடத்த வேண்டாம்'- கல்வியாளர்களின் வேண்டுகோள் #RIPAnitha | Please release NEET exam training material, educationists stress TN

வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (02/09/2017)

கடைசி தொடர்பு:20:55 (02/09/2017)

'அனிதாவின் கனவை காலம் கடத்த வேண்டாம்'- கல்வியாளர்களின் வேண்டுகோள் #RIPAnitha

'அனிதாவின் கனவை நிறைவேற்ற நீட் தேர்வுக்கான பயிற்சிப் புத்தகத்தை உடனே வெளியிட வேண்டும்' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கோரிக்கை வைக்கிறார்கள் கல்வியாளர்கள்.

நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று விடுகிறோம் என்று வெற்று நம்பிக்கை ஊட்டி வந்தார்கள் தமிழக ஆளும் கட்சியினர். கடைசி வரை நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாமல் அரியலூர் மாணவி அனிதா உயிரிழந்ததுதான் மிச்சம். கடந்தாண்டு நவம்பர் மாதம் டெல்லியில் நடந்த கல்வி அமைச்சர்கள் கூட்டத்துக்குப் பின்பு, 'தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்' என்று தெரிவித்தார் அப்போதைய கல்வி அமைச்சர் மஃபா பாண்டியராஜன். ஆனால், இதுவரை அரசுப் பயிற்சி வகுப்பு எதுவும் தொடங்கப்படவில்லை. 

நீட்


மஃபா பாண்டியராஜனுக்குப் பின்பு கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் 'விரைவில் 54,000 பக்கங்கள் அடங்கிய நீட் பயிற்சிப் புத்தகம் வெளியிடப்படும்' என்று கடந்த மூன்று மாதங்களாகப் பல்வேறு நிகழ்ச்சியில் சொல்லி வருகிறார். ஆரம்பத்தில் புத்தகமாக வெளியிடப்படும் என்று சொன்னவர், தற்போது சிடி வடிவில் வெளியிடப்படும் என்று சொல்லி வருகிறார். ஆனால், இதுவரை எதுவும் வெளியிடவில்லை. 

கடந்த வாரம் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையில் விசாரித்தபோது, 'அமைச்சருக்கும், கல்வித் துறைச்செயலாளருக்கும் இடையேயான ஈகோ யுத்தத்தில் பயிற்சிப் புத்தகம் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது' என்று சொன்னார்கள். தற்போது செங்கோட்டையன் கல்வித்துறைச் செயலாளரை மாற்றியிருக்கிறார். அனிதாவின் தற்கொலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் 'விரைவில் நீட் தேர்வுக்குப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்' என்றும், 'பயிற்சிப் புத்தகம் விரைவில் வெளியிடப்படும்' என்றும் தெரிவித்திருக்கிறார். 'உடனே காலம் கடத்தாமல் விரைவில் நீட் பயிற்சிப் புத்தகத்தை வெளியிட்டு அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்கு உதவிட வேண்டும்' என்று கல்வியாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.