வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (02/09/2017)

கடைசி தொடர்பு:20:55 (02/09/2017)

அனிதா மரணத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: கடலூரில் வெடித்தது போராட்டம் #RIPAnitha

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா மரணத்துக்கு நீதிகேட்டு கடலூரில் அரசியல் கட்சிகளும் மாணவர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு மருத்துவப் படிப்பை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு நீதிகேட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எனக் கட்சி, சாதி பாகுபாடு இல்லாமல் பல தரப்பினரும் கொந்தளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடலூர் மாவட்டத்திலும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து விருத்தாசலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், திட்டக்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மோடியின் கொடும்பாவியை எரித்தனர். முட்லூரில் இந்திய ஜனாநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் மெழுகுவத்தி ஏற்றி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அவர்கள், "ஓட்டுப் பொறுக்கிகளான மானங்கெட்ட மத்திய அரசும், மானமில்லா மாநில அரசும் தமிழகத்தில் சமூக நீதியைக் குழிதோண்டி புதைத்துவிட்டார்கள். தமிழகத்தின் கல்வி, அரசியல், கலாசாரம் போன்ற கொள்கைகளை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டது மாநில அரசு. அதன் காரணமாகத்தான் இன்று தமிழகத்துக்குப் பாதகமாக மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களுக்கும் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும் ஏற்பாட்டை தமிழகத்தில் எடப்பாடி அரசு செய்துவருகிறது. கேள்வி கேட்க நாதியற்று போனதால்தான் மத்திய அரசானது தொடர்ந்து தமிழகத்துக்குத் துரோகத்தை இழைத்துவருகிறது. இவர்களின் அரசியல் நாடகத்துக்கு இப்போது அப்பாவி உயிர் பறிபோய்விட்டது. இதற்கு மேலும் நாம் வாயை மூடிக்கொண்டிருந்தால் இன்னும் எத்தனை அனிதாக்கள் நம்மைவிட்டு பிரிந்துபோவார்கள் என்று தெரியாது. ஜல்லிகட்டு போராட்டத்தைபோல், கல்விப் போராட்டத்தை கையில் எடுத்தால்தான் தமிழனின் வலிமை அனைவருக்கும் தெரியும்" என்றார்கள்.