வெளியிடப்பட்ட நேரம்: 19:56 (02/09/2017)

கடைசி தொடர்பு:20:44 (02/09/2017)

“டாக்டர் சீட் கிடைக்கலைன்னா ‘தற்கொலைதான் பண்ணிக்கணும்னு’ சொல்லிட்டே இருந்தா..!” - கலங்கும் அனிதாவின் தோழி #RIPAnitha

ப்போது தமிழ்நாடு முழுக்க ஒலிக்கும் ஒரே குரல்... ‘அனிதா’. சிறு வயதிலிருந்தே மருத்துவராகும் கனவோடு வளர்ந்து, அதற்காக உழைத்த கிராமத்துச் சிறுமி அனிதா. பனிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 196.5/200 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்திருந்த கலைமகள். ஆனால், அகில இந்திய மருத்துவத் தகுதித் தேர்வான 'நீட்'ல் 86 மதிப்பெண் பெற்றதால், அவளின் கனவு தகர்ந்துபோனது. அப்படியும் தளராமல், ‘மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த எளிய, ஏழை குடும்பத்து மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு ஆசைப்படக் கூடாது' என்று குரூரமாகச் சிரிக்கும் 'நீட்' அநீதியை எதிர்த்து நீதிமன்றம்வரை சென்று போராடினாள் அந்தக் குருத்து. ஆனால், ஆள்பவர்கள் கைகோத்து தூக்கிப் பிடித்திருக்கும் அந்தக் கல்விச் சதிக்கு முன்தான் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த அந்தப் பிஞ்சு மனம், தற்கொலை முடிவெடுத்து தமிழகத்தையே அழவைத்துவிட்டது. 

அனிதா

அரியலூர் மாவட்ட கிராமத்துச் சிறுமியான அனிதா, தன்னை மரித்து இப்போது நாட்டின் கவனத்தை 'நீட்' பக்கம் திருப்பியுள்ளார். பள்ளிக்காலம் முதல் 'நீட்' போராட்டங்கள் வரை அவருடன் இருந்த அவரது தோழி பிரியங்கா, தன் தோழியின் நினைவுகளை ஈரம் காயாத விழிகளுடன் பகிர்ந்துகொண்டார்.  

“அனிதாவுக்கு படிப்புதான் உலகம், படிப்புக்குதான் முதலிடம் கொடுத்துவந்தா. எப்பவும் படிச்சுட்டேதான் இருப்பா. ரொம்ப அமைதியான பொண்ணு. அவளோட ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே டாக்டராகணும்ங்கிறதுதான். சின்ன வயசுல இருந்தே அதைச் சொல்லி சொல்லித்தான் படிச்சுட்டு வந்தா. அவ வீட்டுல நாலு பசங்க, இவ மட்டும்தான் ஒரே பொண்ணு. இவளோட சின்ன வயசுலேயே  அவளோட அம்மா இறந்துட்டாங்க. என்றாலும், அவளோட ரெண்டாவது அம்மாவும் இவளுக்கு அம்மா மாதிரிதான் இருந்தாங்க. 

அனிதாவோட அப்பா கஷ்டப்பட்டு தினக்கூலி வேலை பார்த்துதான் அவளைப் படிக்க வெச்சாங்க. பத்தாவதுல 478/500 மார்க் எடுத்தா. இப்போ ப்ளஸ் டூல 1176/200 எடுத்திருந்தா. கட் ஆஃப் மார்க் 196.5/200. இவ்வளவு கஷ்டப்பட்டு அவ படிச்சும் பலனில்லாம, 'நீட்' தேர்வால அவ கனவெல்லாம் சிதைஞ்சுபோச்சு.  

அவ எங்க ஊர்ல யார்கிட்டயெல்லாம் நல்லா பேசுவாளோ அவங்ககிட்டயெல்லாம், 'எனக்கு டாக்டர் சீட் கிடைக்கலைன்னா நான் தற்கொலை பண்ணிப்பேன்'னு சொல்லிட்டேதான் இருந்தா. அதனாலதான் நாங்க எல்லோரும் அவளைக் கண்காணிச்சபடியே இருந்தோம். தற்கொலை பண்ணிக்கிறதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் நான் அவளைப் பார்த்தேன். வெளியில நடந்து போயிட்டு இருந்தா. 'எங்க போற அனிதா?'னு கேட்டேன். 'எங்க சித்தப்பா வீட்டுக்குப் போறேன்'னு சொன்னா. ஆனா, அவங்க சித்தப்பா வீட்டுக்குப் போகாம பாதியிலேயே திரும்பி வீட்டுக்குப் போயிருக்கா. அவ வீட்டுல அவளோட அண்ணன்களெல்லாம் இருந்திருக்காங்க. அப்படியும் ரூம்குள்ள போய் கதவைச் சாத்திட்டுத் தூக்குப் போட்டுக்கிட்டா. கொஞ்ச நேரம் கழிச்சு அவளைக் காணாம்னு தேடும்போதுதான் ரூமுக்குள்ள போய் பார்த்தா... ஸ்டெதஸ்கோப் மாட்ட ஆசைப்பட்டவளோட கழுத்தை தூக்குக் கயிறு இறுக்கியிருந்துச்சு. 

அனிதா

அனிதா எப்பவும் சிரிச்ச முகத்தோட இருப்பா. அவளைப் பிணமா பார்த்தப்போ, 'அடிப்பாவி... இப்படி செத்துப் போறதுக்குதான் அப்படி விழுந்து விழுந்து படிச்சியா?'னு உயிரே வெடிச்சிருச்சு எனக்கு. நாங்கயெல்லாம் நல்லாப் படிக்கிறதும், டாக்டராக நினைக்கிறதும் தப்பா? எங்கள மாதிரி ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்துல படிச்ச கிராமத்துப் பிள்ளைங்களால சிபிஎஸ்இ பாடத்திட்ட அடிப்படையில எழுதுற 'நீட்' எக்ஸாம்ல எப்படி நல்ல மார்க் எடுக்க முடியும்? அதுக்கு எங்களை கோச்சிங் க்ளாஸுக்கு அனுப்ப எங்கப்பா, அம்மாகிட்ட எங்க காசிருக்கு? மொதல்ல அவங்களுக்கு எல்லாம் 'நீட்'னா என்ன, அதுக்குப் புள்ளைகளை கோச்சிங்ல சேர்த்துவிடணுமானு இதெல்லாம் எதுவும் தெரியாதே... நாங்கயெல்லாம் வேற என்னதான் செய்யுறது?  

எப்பவும்போல கட் ஆஃப் அடிப்படையில கவுன்சலிங் நடந்திருந்தா அனிதாவுக்கு டாக்டர் சீட் கிடைச்சிருக்கும். தமிழகத்துக்கு 'நீட்' விலக்குக் கிடைக்கும்னு அவ ரொம்ப நம்பினா. அதனாலதான் டெல்லி வரைக்கும் போய் போராடினா. 'நீட்'டுன்ற பயங்கரம் மட்டும் இல்லாம இருந்திருந்தா, இந்நேரம் அனிதா அவ லட்சியமான மருத்துவப் படிப்புப் படிச்சிட்டு இருந்திருப்பா. டாக்டராக ஆசைப்பட்டவளை இப்போ போஸ்ட்மார்டம் பண்ணிக் கொடுத்துட்டாங்களே.. நீ ஏன் அனிதா நல்லா படிச்ச..? 

‘அரளி விதையை அரைச்சுக் குடிச்ச எங்கம்மாவைக் காப்பாத்த அப்போ நம்ம ஊருல ஒரு டாக்டர்கூட இல்லை. இன்னொரு அம்மாவுக்கு இந்த நிலைமை வரக்கூடாது. நான் படிச்சு நம்ம ஊருக்கு டாக்டரா வருவேன்'னு சொன்ன அனிதாவை, இன்னைக்குப் பொணமாக்கிக் கொடுத்திருச்சு இந்தக் கல்வித் திட்டம். அனிதாக்கள்தான் தமிழ்நாட்டுல நிறைய இருக்கோம். இனியாச்சும் நீட்டைத் தடை பண்ணுவாங்களா?!”

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்