கிரானைட் முறைகேடு: தயாநிதி அழகிரியை பிடிக்க போலீஸ் தீவிரம்!

மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில்  மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன்  தயாநிதி அழகிரி உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் 15 பேரை பிடிக்க போலீசார் தீவிரமாக  தேடி வருகின்றனர்.
 
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் 16 ஆயிரம் கோடி ரூபாய்  அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட  கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின்பேரில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு  வருகிறது.
 
இதுவரை 90 குவாரிகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 45 ஆயிரம்  கிரானைட் கற்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் ஒரு லட்சம் கிரானைட்  கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதிப்பிடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கலெக்டர்  அன்சுல் மிஸ்ரா நேற்று மேலூர் பகுதிக்கு சென்று கிரானைட் குவாரிகளில் மீண்டும்  அதிரடி சோதனை நடத்தினார்.

பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ள இந்த முறைகேடுகள் குறித்து இதுவரை  40 சதவீத மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
இன்னும் 60 சதவீத பணிகள் உள்ளதால் அதிகாரிகளின் சோதனையை  மேலும் 3 வாரங்  களுக்கு நீட்டித்து கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட குவாரி அதிபர்களின் வங்கி கணக்குகள்,  பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளன. போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட கிரானைட் அதிபர்  பி.ஆர்.பழனிச்சாமி இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு,மீண்டும் சிறையில்  அடைக்கப்பட்டார்.
 
இந்நிலையில்,கிரானைட் முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின்  மகன் தயாநிதி அழகிரி,பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் சுரேஷ்குமார்,செந்தில்குமார்  உள்ளிட்ட குவாரி அதிபர்கள் 15 பேரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று குவாரி அதிபர்களை  தீவிரமாக தேடிவருகிறார்கள்.

தயாநிதி அழகிரியின் முன்ஜாமீன் மனு விசாரணையை வருகிற 4-ம் தேதிக்கு உயர்  நீதிமன்ற மதுரை கிளை தள்ளி வைத்துள்ளது.
 
ஆனாலும் துரைதயாநிதி இருப்பிடத்தை தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்து  வருவதாகவும்,அவரை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!