வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (02/09/2017)

கடைசி தொடர்பு:20:54 (02/09/2017)

அனிதாவின் உடலுக்கு டி.டி.வி.தினகரன் அஞ்சலி #RIPAnitha

அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தும் தினகரன்

அரியலூர் மாணவி அனிதாவின் இறுதிச் சடங்கு நடக்கவுள்ள நிலையில் அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்த வந்த தினகரனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைத்துச் சென்றார்.  

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.5. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது.  மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனிதாவுக்கு, நீட் தேர்வு பெரும் இடியாக விழுந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினார் அனிதா. ஆனால், நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சலிங் நடைபெற்றது. இதனால் மனமுடைந்த அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இன்று காலையிலிருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எனப் பலரும் அனிதாவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையொட்டிதான் அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தரப்பு, 'அனிதாவுக்கு நேரில் சென்று தினகரன் அஞ்சலி செலுத்துவார்' என்று தெரிவித்தது. ஆனால், தினகரன் போனால் பிரச்னை நடக்கும் என்று கூறி போலீஸ் அவருக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கொடுக்காது என்று கூறப்பட்டது. இந்நிலையில், தினகரன் நேரில் வந்து அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார். அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த தினகரனை விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைத்துச் சென்றார். அப்போது தினகரனுக்கு எதிராக ஒரு கோஷ்டி, 'கழகத்தைக் கூறு போட்டவனே. கட்சியைப் பிளந்தவனே. வெளியேறு!' என்று கோஷம் போட்டனர். இன்னொரு தரப்பு தினகரனுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதையடுத்து இரு தரப்புகளுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தப் பதற்றமான சூழலில் தினகரன் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கிளம்பினார்.