Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரிஜினல் லைசென்ஸ் உத்தரவு... சாதகமும், பாதகமும் - ஓர் அலசல்..!

 

                                    ஒரிஜினல் லைசென்ஸ் மறுத்துப் போராட்டம்

மிழகத்தில் லாரி, தனியார்ப் பேருந்து, கார், டிராக்டர், மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள், தங்களின் அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு போட்டுள்ளது. இது எந்தளவுக்கு பாதகம் என்று குரல்கள் எழுகிறதோ, அதே அளவில் அரசுத்தரப்பில் இருந்தும், 'இது சாதகமே' என்ற பதிலும் வருகிறது.

சாலை பாதுகாப்புக்கான உச்சநீதிமன்றக்குழு சொல்வது என்ன ?

வாகனத் தணிக்கையின்போது மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமங்களைப் போலியாகவே பலர் காட்டுகின்றனர். அது போலி என்பதை மறைத்து அவர்களை விடுவிக்க லஞ்சம் கைமாறுகிறது என்கிற புகார்களும் ஒருபக்கம் இருந்துவந்தன. இந்நிலையில்தான் சாலை பாதுகாப்புக்கான உச்ச நீதிமன்றக் குழு, சாலை விபத்துகளைக் குறைக்கும்பொருட்டுக் குறிப்பிட்ட சில போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர் உரிமத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க, ரத்துசெய்ய அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தி அறிக்கை அனுப்பிவைத்தது. அதன் தொடர்சியாக, ''வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கையில் வைத்திருப்பது கட்டாயம்'' என்ற உத்தரவை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட, அதை நடைமுறைக்குக் கொண்டுவரும் பணியில், போலீஸார் வேகம் காட்ட ஆரம்பித்துள்ளனர். 

போலீஸாரின் முந்தைய சுற்றறிக்கை

சாலைப் பயன்பாட்டில் மட்டுமே தமிழகத்தில் 13 லட்சம் வாகனங்களும், விற்பனைக் கூடம் மற்றும் வீட்டில் பழுதாகி நிற்பது போன்ற வாகனங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் 2.20 கோடி வாகனங்களும் என மொத்தம் 2.33 கோடி வாகனங்கள் உள்ளன. அடுத்ததாக இன்னொரு கணக்கையும் இங்கே எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, தமிழகத்தில் மொத்தமுள்ள 81 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டுமே 19,87,480 பேருக்குப் பழகுநர் ஓட்டுநர் உரிமங்களும் (எல்.எல்.ஆர்), மற்றும் 9,61,771 பேருக்கு நிரந்தர ஓட்டுநர் உரிமங்களும் அளிக்கப்பட்டுள்ளன. சென்னைப் போக்குவரத்துப் போலீஸார் தங்களின் சுற்றறிக்கையில், "மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 3-ன்படி உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில், சீருடையில் உள்ள போலீஸார் யார் இந்த ஆய்வில் ஈடுபட்டாலும் ஓட்டுநர்கள் தங்களின் அசல் ஓட்டுநர் உரிமத்தை அப்போது கட்டாயமாகக் காட்டிட வேண்டும். அசல் ஓட்டுநர் உரிமத்தை அப்படிக் காட்டத் தவறினால், 1988 பிரிவு 181-ன்படி அவர்களுக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை அல்லது ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்விரண்டும் சேர்த்துக்கூடத் தண்டனையாக விதிக்கப்படலாம். 1.9.2017-முதல் இது கட்டாய நடைமுறைக்கு வருகிறது" என்று கூறியுள்ளனர்.

லாரிதொழிலில் பெரும்பாதிப்பு - சுகுமார்

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.சுகுமார், “கொஞ்சமும் மனிதாபிமானம் அல்லாத ஒரு முடிவு என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். இந்த உத்தரவு லஞ்சம் பெருகிடவே வழிவகுக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் லாரி டிரைவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் பெரும்பாலும் பீகார், ஒடிசா, அசாம் போன்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளே. இவர்கள் விபத்தில் சிக்கிக்கொண்டால் அதற்கான எந்தவித இழப்பீடும் அவர்கள் குடும்பத்துக்குக் கிடைப்பது இல்லை. கம்பெனி சட்டத்திட்டங்களில் இருக்கிற நியாயமான சலுகைகளும் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதும் இல்லை. இதையெல்லாம் ஒழுங்குபடுத்தி நடைமுறைக்குக் கொண்டுவருவதை விட்டுவிட்டு ஒரிஜினல் லைசென்ஸைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு போடுவதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அடிப்படை கட்டமைப்புகளில் ஒன்றான பல ஆயிரம் கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள் குண்டும்குழியுமாகத்தான் இருக்கின்றன. விபத்துகள் அதிகமாவது இதனால்தான். ஒரிஜினல் லைசென்ஸைக் கையில் வைத்திருந்தால் இந்த விபத்துகளில் இருந்து தப்பித்துவிட முடியுமா? டிஜிலாக் முறை என்பது அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் இருக்கிற விஷயம். லைசென்ஸ் எண்ணைச் சொன்னால் போதும், கணினியில் ஒரே தட்டுதான்... சம்பந்தப்பட்டவரின் புகைப்படம் முதல் அவருடைய மொத்த வரலாறும் கணினியில் வந்து விழுந்துவிடும். பிறகு, ஏன் ஒரிஜினல் லைசென்ஸைக் கேட்கிறார்கள்? இங்கே அடிப்படையிலேயே கோளாறுதான்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் குறிப்பிட்ட லைசென்ஸ் எண்ணைக் கணினியில் தட்டினால், அது எந்த விவரத்தையும் காட்டாது. ஏனெனில், தமிழ்நாட்டில் உள்ள எந்த ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும் அதற்கான கணினி வசதி செய்யப்படவில்லை. அவற்றை ஒரே குடையின்கீழ் கொண்டுவரக்கூடிய ஒருங்கிணைப்பும் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லாததால், அங்கே யாருடைய டிரைவிங் லைசென்ஸ் எண்ணைக் காட்டி கணினியில் தட்டினாலும் அது உரிய விபரங்களைக் காட்டப்போவதும் இல்லை. சொல்லப்போனால், வாகனத் தணிக்கையில் ஈடுபடுகிற போலீஸாரின் கைகளிலும் கணினி இருப்பதில்லை. இருநூறு ரூபாய் என்றிருந்த 'டோல் வரி' அறுநூறு ரூபாய் ஆக உயர்ந்திருக்கிறது. 'டோல்'களில் ஆம்புலன்ஸ் நிறுத்தி இருக்க வேண்டும். அங்கே போன், டாய்லெட், சுத்தமான குடிநீர் இருப்பு போன்ற வசதிகள் இருக்க வேண்டும். நாட்டில் ஒரு டோலில்கூட இந்த வசதிகள் செய்யப்படவில்லை. அடிப்படையில் ஆயிரம் குறைகளை வைத்துக்கொண்டு ஒரிஜினல் லைசென்ஸ் இருந்தாலே அனைத்துக்கும் தீர்வு வந்துவிட்டதுபோலத் திட்டமிடுவது அபத்தமான ஒன்று" என்றார்.

தமிழ்நாடு டிரான்ஸ்போர்ட் ஜாய்ன்ட் கமிஷனர் பதில்

“தனியார் கால் டாக்ஸி நிறுவனங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள்,  ஒரிஜினல் லைசென்ஸை டாக்ஸி நிறுவன முதலாளிகளிடம் கொடுத்துவிட்டு, கலர் ஜெராக்ஸ் லைசென்ஸை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு கார் ஒட்டுகிறார்கள். ஒரு லட்சம் கார் ஓட்டுநர்கள் சென்னையில் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரிஜினல் லைசென்ஸ்தான் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அழுத்தம் அவர்களுக்குக்  கூடுதல் அழுத்தம்தானே? '' என்ற கேள்வியைத் தமிழ்நாடு டிரான்ஸ்போர்ட் ஜாய்ன்ட் கமிஷனர் வீரபாண்டியன் முன் வைத்தோம். அதற்கு அவர், ''செப்டம்பர் 1, 2017 முதல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததாதகச் சொல்லியிருக்கிறார்கள்... இடையில் கோர்ட்டிலும் ஏதோ முடிவெடுத்துள்ளனர். மேல் விபரங்களுக்கு நீங்கள் போலீஸ் கமிஷனரைக் கேட்டுக் கொள்ளுங்கள். அவர்தான் இதை நடைமுறைப்படுத்துகிறவர்" என்று முடித்துக்கொண்டார்.

போக்குவரத்துக் கூடுதல் போலீஸ் கமிஷனர் பெரியய்யா

சென்னைப் போக்குவரத்துக் கூடுதல் போலீஸ் கமிஷனர் பெரியய்யாவிடம் கேட்டோம். “ஒரிஜினல் லைசென்ஸ் கையில் இருக்கிறதா என்பதை மட்டுமே மையப்படுத்தி வாகன ஓட்டிகளிடமும் நாங்கள் சோதனை மேற்கொள்ளப் போவதில்லை. ஒரிஜினல் லைசென்ஸை மோட்டார் வாகன ஓட்டிகள் கையில் வைத்திருக்க வேண்டும் என்பது ஏற்கெனவே சட்டத்தில் இருப்பதுதான். அது ஒன்றும் புதிதல்ல. அதிக வேகம், சிக்னல் மதியாமை, ஹெல்மெட் இல்லாத பயணம், சீட் பெல்ட் போடாதது, குடிபோதையில் வாகனத்தை இயக்குதல், அதிக சுமைகளுடன் வாகனத்தை இயக்குதல் போன்ற குற்றங்கள் எப்போதும் போலவே  இப்போதும் கண்காணிக்கப்படும். அப்போது அவர்களிடம் ஒரிஜினல் லைசென்ஸைக் கேட்க வேண்டிய சூழ்நிலை கண்டிப்பாக அமைந்துவிடும். சட்டத்துக்கு உட்பட்டு  மோட்டார் வாகனத்தை இயக்கும் நபர்களிடம் ஒரிஜினல் லைசென்ஸைக் கேட்கிற அவசியம் இல்லை. மோட்டார் வாகன ஓட்டிகள் செய்கிற முக்கியமான ஆறு குற்றங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உச்ச நீதிமன்றக் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. இப்படியான குற்றங்களைச் செய்து போலீஸில்  பிடிபட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் பேரில், வெறும் 5 ஆயிரம் பேர் மட்டுமே ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருந்தனர். இது எந்தவகையில் டிரான்ஸ்போர்ட் அதிபர் புல்லட் ரமேஷ்நியாயமானது? சாலைகளில் நடந்துபோகும் மக்களை விபத்தில் சிக்கிவிடாமல்  காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் போலீஸுக்கு இருக்கிறதே... அதற்குத்தான் இந்த ஒரிஜினல் லைசென்ஸ்" என்றார்.

டிரான்ஸ்போர்ட் அதிபரின் கருத்து

புல்லட் வி.ரமேஷ் : நிஷாந்த் ட்ரெயிலர் டிரான்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹெவி எக்யூப்மென்ட்ஸ்  சப்ளையர்ஸ் ஆக டிரான்ஸ்போர்ட் தொழிலில் சுமார் 30 ஆண்டுகளாக இருக்கிறேன். என்னிடம் நூற்றுக் கணக்கில் டிரைவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம்  ஜெராக்ஸ் டிரைவிங் லைசென்சை வாங்கிக் கொண்டு, என்னுடைய பல லட்சம் மதிப்புள்ள  லாரியை எப்படிக் கொடுத்து அனுப்ப முடியும். அந்த லாரியில் ஏற்றப்படும்  பொருள்களும் பல லட்சம் மதிப்பு கொண்டவைதான். லாரி டிரைவர்களுக்கான சூரிட்டியை  நாங்கள் கொடுக்கிறோம் என்று அரசாங்கம் சொல்லுமா ?

தொழிற்சங்கத்தலைவர் சொல்வது என்ன ?

ஹாத்தீம்பேக்தமிழ்மாநிலக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் ஜி.ஹாத்தீம்பேக் : எல்லா விஷயத்தையும், ஆதார் கார்டில் கொண்டுபோய் லிங்க் கொடுங்க என்கிற அரசாங்கம், டிரைவிங் லைசென்ஸையும் அப்படி லிங்க் கொடுத்து விட்டால் போதுமே? போக்குவரத்து விதிகளை மீறுகிறவரின் ஆதார் கார்டை வாங்கியே அவர் ஜாதகத்தை எடுத்து விடலாமே?  போலீஸார்  ஒரிஜினல் லைசென்ஸைக்  கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். லைசென்ஸைக் கொடுத்தவர், அடுத்த நாள்  ஸ்டேசனுக்குப் போய் அபராதம் செலுத்திவிட்டு அந்த லைசென்ஸை திரும்ப வாங்கத்தான் முடியுமா? அதைவிட அவர் புது லைசென்ஸு கேட்டே அப்ளை செய்து விடலாம்...

ஆர்.டி.ஐ. ஆர்வலர் கருத்து

ஆர்.டி.ஐ. ஆர்வலர் எஸ்.கந்தசாமி : போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் நேரடி மோதலை உருவாக்கிக் கொடுத்திருக்கும் திட்டம் கந்தசாமி எஸ்.என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். பிக் பாஸ் கதை போலத்தான் இனி ஒவ்வொரு நாளும் இருக்கப் போகிறது. ஒரிஜினல் லைசென்ஸை கையில் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்று சொல்வதே சட்டத்துக்கு எதிரானது. சட்டத்துக்கு எதிரான ஒன்றை சட்டமாக்க முயற்சிக்கும் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்வது ?... ஹெல்மெட் அணிவது கட்டாயம், உயிரைக் காப்பாற்றும் விருப்பம் உள்ளோர் அணியலாம், சாலை பாதுகாப்பு வாரங்களில் மட்டும் அணியலாம்... என்று ஏற்றமும், இறக்கமுமாய்  ஆகிப்போன ஹெல்மெட் விவகாரம் போலவே இதுவும் இருக்குமா அல்லது வேறு மாதிரியான விளைவுகளைக் கொண்டு வருமா என்பதை இப்போதுள்ள சூழலை வைத்து  சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement