வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (02/09/2017)

கடைசி தொடர்பு:21:25 (02/09/2017)

கொட்டும் மழையிலும் தொடரும் திருச்சி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

திருச்சி மாணவர்கள் போராட்டம்

அனிதாவின் மரணம் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அனிதாவின் தற்கொலைக்கு விசாரணைக்குழு அமைக்கவும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும்  திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் அனைத்திந்திய மாணவர் மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவைச் சேர்ந்த தினேஷ், ஜீவானந்தம், சேக்அப்துல்லா, சூர்யா, ரியாத் நிஷா உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். ஆரம்பத்தில் ஐந்து பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் எண்ணிக்கை தற்போது 63 ஆக உயர்ந்துள்ளது. திருச்சியில் மாலை 6.30 மணியிலிருந்து மழை பெய்து வருகிறது. ஆனபோதிலும், மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் தினேஷ் கூறியதாவது " நாங்கள் காலை 9 மணியிலிருந்து  உண்ணாவிரதம் இருந்து வருகிறோம். முதலில் ஐந்து பேருடன்தான் ஆரம்பித்தோம். ஆனால், தற்போது 63 பேர் இருக்கிறார்கள். நாங்கள் போராட்டம் செய்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை. கல்லூரியின் முன்பு போராடவும் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து கொண்டு போராடி வருகிறோம். நேற்று நானும் என் நண்பர்களும் அரியலூர் சென்று அனிதாவின் உடலைப் பார்த்தோம். அப்பொழுதே முடிவு செய்துவிட்டோம். 

கல்வியை மத்திய அரசின் பட்டியலிலிருந்து, மாநில அரசுக்கு மாற்ற வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசுக்கு ஜால்ரா தட்டுவதை நிறுத்திவிட்டு இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கி மாணவர்களின் நலனைக் காக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் போராட ஆரம்பித்தோம். அனிதாவை போல் இனி ஒரு மாணவ மாணவியும் பாதிக்கபடக் கூடாது. அனிதா மரணத்துக்கு நீதி கேட்பது மட்டுமல்லாமல், மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்காகவும் போராட வேண்டும். ஐந்து பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாணவர்கள் இங்கு வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்கள், பொதுமக்கள் அனிதாவை சொந்தப் பிள்ளையாக எண்ணி நீதி கேட்டு எங்களுடன் இணைய வேண்டும் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். மழை பெய்தாலும் சரி யார் தடுத்தாலும் சரி அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்பது உள்பட எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்" என்றார் தினேஷ்.