வெளியிடப்பட்ட நேரம்: 23:20 (02/09/2017)

கடைசி தொடர்பு:23:20 (02/09/2017)

பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் சைலேந்திரபாபு ஆய்வு! - சிறை அங்காடி திறப்பு

சிறை கைதிகள் வளர்க்கும் மாடு

தமிழக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி-யான சைலேந்திரபாபு பாளையங்கோட்டை மத்தியச் சிறைச்சாலையில் இன்று ஆய்வு செய்தார். அப்போது சிறைக் கைதிகளால் நடத்தப்படும் அங்காடிகளைத் திறந்து வைத்தார்.

தமிழக சிறைச்சாலைகளில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அங்காடிகள் திறக்கப்பட்டன. சிறைக்கைதிகள் மூலமாக நடத்தப்பட்ட இந்த அங்காடிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த அங்காடிகளில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், மூன்று வருடங்களுக்கு முன்பு அவை மூடப்பட்டன. இந்த நிலையில், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி-யான சைலேந்திரபாபு இன்று பாளையங்கோட்டை மத்தியச் சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்டதுடன் சிறைச்சாலை அங்காடிகளையும் திறந்து வைத்தார்.

சிறை சலூன்

பேக்கரி, உணவகம், சலூன், அயர்ன், காய்கறி, பாலகம் உள்ளிட்ட கடைகள் இன்று திறக்கப்பட்டன. ஏற்கெனவே இவை நடைமுறையில் இருந்தபோது பொதுமக்கள் ஆர்வத்துடன் இவற்றை பயன்படுத்தி வந்தனர். அதனால், மீண்டும் திறக்கப்பட்டதை அறிந்து பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். கடைகள் திறக்கப்பட்டபோதே ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர். 

பின்னர் பேசிய சிறைத்துறை அதிகாரியான சைலேந்திரபாபு, ‘கடந்த 2014-ம் வருடம் இந்த அங்காடிகள் புதுப்பிக்கப்படாமல் மூடப்பட்டன. அவற்றை புதுப்பித்து மீண்டும் திறந்து இருக்கிறோம். இங்கு காய்கனிகள் விற்பனையகம் உள்ளது. சிறையின் உள்ளேயே இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உள்ளேயே சிறைக் கைதிகளால் மாட்டுப் பண்ணை பராமரிக்கப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் சுத்தமான பால் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிறையில் உள்ள கைதிகளால் தயாரிக்கப்படும் ரெடிமேட் ஷர்ட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஹோட்டல், அயர்ன் கடை, சலூன் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கடைகளில் வெளி மார்க்கெட்டுகளை விடவும் குறைந்த விலையில் தரமான பொருள்கள் கிடைக்கும். இந்தச் சிறையில் 17 ஐ.டி.ஐ படித்தவர்கள் கைதிகளாக உள்ளனர். அவர்களைக் கொண்டு கார், பைக் உள்ளிட்டவற்றுக்கான பேட்டரி தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

மாணவர்களுடன் அதிகாரி

பாளையங்கோட்டை சிறைச்சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், செல்போன் உள்ளிட்டவை பயன்படுத்துவதை 100 சதவிகிதம் தடுக்கப்பட்டு விட்டது. செல்போன் ஜாமர் கருவிகள் பொருத்தப்படாத சிறைச்சாலைகளில் அதனை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிறைச்சாலை அங்காடிகளில் கிடைக்கும் லாபத்தில் 20 சதவிகிதம் கைதிகளுக்கு வழங்கப்பட உள்ளது. பாளையங்கோட்டை சிறைச்சாலையில் முதல்கட்டமாக 35 கைதிகள் சுழற்சி முறையில் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்’’ எனத் தெரிவித்தார். 

பாளையங்கோட்டை மத்தியச் சிறையின் எதிரில் உள்ள காதுகேளாதோர் பள்ளி மாணவர்களை இந்த அங்காடிக்கு அழைத்து வந்ததுடன், அவர்களுடன் உணவு அருந்தி மகிழ்ந்தார். இதனால் அந்தக் குழந்தைகள் மிகுந்த உற்சாகம் அடைந்து மகிழ்ந்தனர்.