வெளியிடப்பட்ட நேரம்: 23:38 (02/09/2017)

கடைசி தொடர்பு:23:38 (02/09/2017)

கண்ணீரில் மிதக்கும் தமிழகம்..! எரியூட்டப்பட்டது அனிதாவின் உடல்

நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா உடல் குழூமுர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 


அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதாவின் மருத்துவக் கனவு நீட் தேர்வினால் தகர்ந்ததால் விரக்தி அடைந்தவர், நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியப் பின், இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமாக பங்கேற்றனர்.

மேலும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்களும் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். தமிழகத்தில் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கண்ணீருடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனிதாவின் வீட்டிலிருந்து மயானம் அமைந்துள்ள இடம் வரை ஆயிர்க்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இறுதி ஊர்வலத்தில், மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று நடந்துசென்றனர். விஜயகாந்த், தகன மேடைக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். இறுதி ஊர்வலத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கடுமையான கோஷங்கள் எழுப்பப்பட்டன. குழுமூர் கிராமம் முழுக்க கண்ணீரில் மிதந்திருக்க அனிதாவின் உடல் எரியூட்டப்பட்டது.