வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/09/2017)

கடைசி தொடர்பு:16:16 (13/07/2018)

கச்சதீவு அருகே நாட்டுப்படகில் கடத்தி செல்லப்பட்ட 1,000 கிலோ ரசாயன உரம் பறிமுதல்

ராமநாதபுரம் கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தி சென்ற ஆயிரம் கிலோ ரசாயன உரம் இலங்கை கடற்படையினரால் கைபற்றப்பட்டது. இதுதொடர்பாக பாம்பனைச் சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு ஒன்றைப் பிடித்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் இறுதிப் போரில் முடக்கப்பட்ட பின் இலங்கைக் கடல் பகுதிகளில் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கக் கட்டிகள் கடத்தப்படுவதும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள், மாத்திரைகள், கஞ்சா போன்றவை கடத்தப்படுவதும் அதிக அளவில் நடந்து  வருகிறது. இந்தக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அவ்வப்போது சிக்கினாலும், கடத்தல் நடவடிக்கைகள் முழுமையாக நிற்கவில்லை.

படகுகள்


இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி ஒன்றில் இருந்து நாட்டுப்படகு ஒன்றினை கச்சதீவு அருகே இலங்கை கடற்படையினர் வழி மறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த படகில் தலா 50 கிலோ எடை கொண்ட 20 மூடைகள் பதுக்கி வைக்கப்படிருப்பதை கண்டனர். அவற்றைக் கைபற்றிய இலங்கை கடற்படையினர் பிரித்து பார்த்த போது  அந்த மூடைகளில் அமோனியம் சல்பேட் எனப்படும் ரசாயன உரம் என தெரியவந்தது. 
 இதையடுத்து ரசாயன உர மூடைகளுடன் நாட்டுப் படகினையும், அதில் இருந்த பாம்பன் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்களையும் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு மீனவர்களிடம் இந்தக் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை கடற்படைத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.