நீட் போராட்ட அச்சம் - சுற்றிவளைக்கப்பட்ட மெரினா #NEETkilledAnitha

காற்றைக்கூடக் கட்டி வைக்கும் முடிவில் தமிழக காவல்துறையினர் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக எளிமையான அடையாளப்போராட்டமாக துவங்கிய மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக மாறியது. தமிழக வரலாற்றில் அப்படி ஒரு போராட்டம் நடந்ததில்லை என்கிற அளவில் அது இருந்தது. அதன் இறுதிக்கட்டம் கடுமையான முறையில் போய் முடிந்தாலும் மாணவர்கள் தங்கள் நோக்கத்தில் உறுதியாக இருந்து அரசைப் பணியவைத்தனர். ஆனால் அதற்குப் பின் மெரினாவில் எந்தவிதமான போராட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் கும்பலாக இளைஞர்கள் சேர்ந்து இருந்தால் கூட காவலர்கள் என்ன ஏதென்று விசாரிக்கும் அளவுக்கு விழிப்புடன் உள்ளனர். 

நீட்

இந்நிலையில் நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும் 'நீட்' தேர்வில் வெற்றிபெற முடியவில்லை என்பதால் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வினை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியவர் இந்த அனிதா. எளிமையான கூலித்தொழிலாளியின் மகளான இவரின் மரணம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தலைவர்களும் அனிதாவின் சொந்த ஊருக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று இரவு அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அதற்கு சில மணிநேரம் முன்பாக காவல்துறையினர் "சென்னை மெரினாவில் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும்,நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் சனிக்கிழமை இரவு 12 மணிக்குக் கூட உள்ளதாகச் செய்திகள் வருகின்றது. மெரினாவில் போராட யாருக்கும் அனுமதி இல்லை. மாணவர்கள் இளைஞர்கள் தடையை மீறிக்கூடினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறிவிப்பினை வெளியிட்டது. 

Marina

இந்த அறிவிப்பினை தொடர்ந்து சனிக்கிழமை இரவு 12 மணி அளவில் மெரினாவின் சூழல் எப்படி இருக்கிறது என்று நேரடியாகச் சென்று பார்வையிட்ட போது பெரும் வியப்புதான் காத்திருந்தது. இந்தியாவின் மிகப்பெரிய கடற்கரையான மெரினாவை காவல்துறை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தது. மெரினா கடற்கரைக்குச் செல்வதற்கு வடக்கு பகுதியில் இருந்து வந்தால் அதாவது எம்ஜிஆர் - ஜெயலலிதா சமாதி வழியாக வரும் போது நீச்சல்குளம் அருகே ஒரு பாதை, நேதாஜி சிலை அருகே ஒரு பாதை, டாக்டர் பெசன்ட் சாலை வந்து காமராஜர் சாலையில் இணையும் இடத்தில் ஒரு பாதை, அதையடுத்து குடிசை மாற்று வாரியத்தின் எதிரே ஒரு பாதை, ஔவையார் சிலை அருகே ஒரு பாதை, அதற்கு அடுத்து காமராஜர் சிலை அருகே ஒரு பாதை என மொத்தம் 6 பாதைகள் காமராஜர் சாலையில் இருந்து மெரினாவுக்குள் செல்ல இருக்கின்றன. இவையின்றி ஒரு பாதை கலங்கரை விளக்கம் பின்னால் இருக்கிறது. தற்போது அனைத்துப் பாதைகளும் போலிஸின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒரு சைக்கிள் கூட உள்ளே செல்ல முடியாத அளவுக்குத் தடுப்புகள் கொண்டு மூடியுள்ளனர். கிட்டதட்ட மெரினா கடற்கரை ஒரு திறந்தவெளிச்சிறை போல மாற்றியுள்ளனர். 

marina

நான்கு ஜிப்சி வாகனங்களில்  போலிசார் ரோந்து சுற்றி வருகின்றனர். அருகிலிருக்கும் குப்பத்து மக்கள் மட்டும் கடற்கரை மணலில் தூங்கி வருகின்றனர். மற்றபடி புதியவர்கள் யாராவது வந்தால் அழைத்து விசாரித்து அனுப்பிவைக்கின்றனர். வாகனங்களில் மட்டுமில்லாமல் உள்ளே இருக்கும் உட்புறச்சாலை வழியாக போலிசார் நடந்தும் ரோந்து செல்கின்றனர். கடலின் அருகே இருட்டாக இருக்கும் பகுதியில் டார்ச் விளக்கோடு போலிசார் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை 3 மணி நிலவரப்படி மெரினா கடற்கரைப்பகுதியில் போராட்ட நோக்கோடு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இளைஞர்கள் மட்டுமல்ல எந்த இளைஞர்களும் இல்லை. காவலர்களும் அதிகாரிகளும் மட்டுமே உள்ளனர்.  இன்றைக்கு வரவில்லை என்றாலும் ஒருநாள் இளைஞர்கள் மீண்டும் வருவார்கள் என்று காவல்துறை எதிர்பார்ப்பது தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!