திருச்சி அருகே மூன்று மாடி கட்டடம் இடிந்து விபத்து..! இருவர் பலி | Three floor building collapse in Trichy

வெளியிடப்பட்ட நேரம்: 05:13 (03/09/2017)

கடைசி தொடர்பு:10:13 (03/09/2017)

திருச்சி அருகே மூன்று மாடி கட்டடம் இடிந்து விபத்து..! இருவர் பலி

திருச்சி மலைக்கோட்டை அருகே, மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்டட விபத்து


திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை அருகே மூன்று மாடிக் கட்டடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. வீடுகளில் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கட்டடம் இடிந்துவிழுந்துள்ளது. இடிந்துவிழுந்த கட்டடத்தில் 6 குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. விபத்து நடந்த கட்டடம் பழைமையான கட்டடம் என்று கூறப்பட்டுகிறது. பொதுமக்கள், காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கட்டட விபத்து

இந்நிலையில், இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகன் என்று கூறப்படுகிறது. அதே குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.