'உன்னதமான ஒரு மருத்துவரை இழந்துவிட்டோம்' - இயக்குநர் சுசீந்திரன்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்தார். சிறு வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பது அவரது விருப்பம். அதனால் நன்றாக படித்த அவர், பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்ணும் எடுத்தார். அந்த மதிப்பெண்ணுக்கு எப்படியும் நல்ல கல்லூரி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தபோது இடியாக வந்து விழுந்தது நீட்.

 

நீட்டை எதிர்த்து பல்வேறு வகைகளில் போராடிய அனிதா டெல்லி சென்று உச்ச நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டினார். ஆனால், கடைசி வரை நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்து மத்திய, மாநில அரசுகள் பின் எது நடக்காது என்று கூறி வந்தார்களோ, அதை நடக்க வைத்துவிட்டார்கள். இதனால், தன் உயிரை மரித்துக் கொண்டு நீட் தேர்வுக்கான எதிரான போராட்டத்தை தமிழகம் முழுவதும் பரவ விட்டுள்ளார் அனிதா. அனிதாவின் உடல் அவரது சொந்த ஊரான குழுமூர் கிராமத்தில் நேற்று எரிக்கப்பட்டது. அனிதாவின் மரணத்துக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சுசீந்திரன்

 

இந்நிலையில், இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாம் இன்று அனிதா என்ற பெண்ணை இழக்கவில்லை. வருங்காலத்தில், 1000-க்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கக் கூடிய ஒரு நல்ல மருத்துவரை இழந்துவிட்டோம். வரட்டு கௌரவத்துக்காவும், பணம் சம்பாதிப்பதற்காகவும் மட்டும் மருத்துவம் படிக்கும் இந்த கேடுகெட்ட சமுதாயத்தில், சேவை மனப்பான்மையுடன் இருந்த ஒரு உன்னதமான மருத்துவரை நாம் இழந்துவிட்டோம். 


இந்த இழப்பு பணம் படைத்தவர்களுக்கு அல்ல. அனிதாவைப் போல் உள்ள  மாணவர்களை, மருத்துவர்களாக உருவாக்க நீட் தேர்வை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம். அனிதாவின் மரணம் அர்த்தமுள்ளதாக மாற வேண்டும் என்றால், ஒன்று சேருவோம்... போராடுவோம்..." என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!