'தி.மு.க கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்' - திவாகரன் கருத்துக்கு தினகரன் மறுப்பு!

நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று கூறி திவாகரன் கருத்துக்கு டி.டி.வி. தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

திவாரகன்


அனிதாவின் மரணத்தால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதையடுத்து, அனிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, அனிதாவின் உடல் அவரது சொந்த ஊரான குழுமூர் கிராமத்தில் நேற்று எரிக்கப்பட்டது. அவரது உடலுக்கு, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.தி.மு.க அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அனிதாவின் குடும்பத்துக்கு, ரூ.10 லட்சம் உதவித் தொகையை மு.க. ஸ்டாலின் வழங்கினார். மேலும், நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாளை (திங்கள்கிழமை) அனைத்துக் கூட்டத்துக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, "தி.மு.க-வின் ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள்" என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியிருந்தார்.

திவாகரன் - தினகரன்

இந்நிலையில், "நாளை நடைபெறும் தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் எனது ஆதரவாளர்கள் பங்கேற்க மாட்டார்கள்" என்று தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், "எனது ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்ற  திவாகரன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து" என்று தினகரன் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!