வெளியிடப்பட்ட நேரம்: 14:22 (03/09/2017)

கடைசி தொடர்பு:11:56 (04/09/2017)

’விஜயகாந்த் மனசு போல் எந்த தலைவர்களுக்கும் வராது’ - அனிதா இறுதிசடங்கில் நெகிழ்ந்த மக்கள்!

 

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பக்ரித் விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும்  ஒவ்வொரு ஊருக்கு செல்வது வழக்கம். இது கட்சி நிகழ்ச்சி. அந்த வகையில் நேற்றுவாணியம்பாடியில் பக்ரித் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அனிதாவின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதாக இருந்துள்ளார் கேப்டன். ஆனால் அங்கிருந்து அவர் கிளம்பவே நேரமாகயிருக்கிறது.

விஜயகாந்த்
 

சில நிர்வாகிகள் விஜயகாத்திடம், ”இங்கேயே மணி 7 ஆகிவிட்டது இனிமேல் சென்றால் அங்கு செல்லமுடியாது நீங்கள் போவதற்கு அந்திநேரமாகிவிடும். நாளை அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லிகொள்ளமே” என்று சொல்ல, அதற்கு விஜயகாந்த் ”என்ன ஆனாலும் பரவாயில்லை. வண்டியை எடு அனிதாவை பார்த்துவிட்டு வருவோம் எப்படியும் அனிதாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அவர்கள் அரியலூர் வந்த போது பார்த்தசாரதி அரியலூர் மாவட்டசெயலாளர் ராமஜெயவேலிடம் விஜயகாந்த் போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதற்கு அவர் ”அனிதாவின் உடலை எடுத்துவிட்டனர்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு விஜயகாந்த் “ டாக்டர் ஆகமுடியவில்லையே என்று மனவிரக்தியில் இறந்திருக்கும் சிறுமி அனிதாவை பார்க்காமல் சென்றால் நாம் எல்லாம் என்ன தலைவன். ஆயிரகணக்கான அனிதாக்களின் மனகுமுறலை வெளிபடுத்தியிருக்கிறார் இந்த அனிதா. இறுதி ஊர்வலத்திற்கு செல்லாமல் இருந்ததால் எப்படி. அவுங்க தூக்கினா தூக்கிட்டு போகட்டும் சுடுகாட்டிலாவது அஞ்சலி செலுத்திவிட்டு  போவோம்” என்று சொல்லியிருக்கிறார் விஜயகாந்த்.

பின்பு அனிதாவின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துவந்து எரிப்பதற்கான வேலைகளும் தொடங்கிகொண்டிருந்த நேரத்தில் சரியாக 10.45 க்கு குழூமுர் வந்தார். அவரை பார்த்ததும் தொண்டர்கள் சத்தமிட ”டேய் சும்மா வாங்க எங்க வந்திருக்கோம்னு தெரியாதா” என்று விஜயகாந்த் சொல்ல அந்த இடமே கப்சிப் ஆனது.

பின்பு அனிதாவின் உடலுக்கு மாலை அணிவித்துவிட்டு அனிதாவின் முகத்தையே மூன்று நிமிடம் கண் அசராமல் பார்த்த போது அவரது கண்கள் கலங்கியது. பின்பு அவர் திரும்பிகொண்டு அவரது கண்ணை துடைத்துகொண்டு வெளியே வந்த போது பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுக்க முயற்சி செய்தனர். அதற்கு அவர் ”நான் இந்த இடத்தில் பேசவில்லை” என்று கூறிவிட்டு காரில் ஏறி சென்றார். அங்கிருந்த மக்கள் விஜயகாந்தின் செய்கையை பார்த்து ”விஜயகாந்த் மனசு போல் எந்த தலைவர்களுக்கும் வராது” என்று நெகிழ்ந்துள்ளனர்.