Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் செல்லலாம்!” - கொதிக்கும் தினகரன்

"நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும் பதவி விலகினால் போதாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதவி விலகினாலே மற்ற அனைத்தையும் நாங்கள் சரி செய்து விடுவோம்" என்று அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்.

தினகரன்

அ.தி.மு.க-வின் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பி.எஸ். அணியும் இணைந்தது, தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியது. அதையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் புதுச்சேரி அருகேயுள்ள ரிசார்ட்டில் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில், அரியலூர் மாணவி அனிதாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளச் செல்லும் வழியில் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்த புதுச்சேரி ரிசார்ட்டுக்கு வந்தார் தினகரன்.

அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “நாங்கள் முதல்வர் பதவியில் அமர்த்திய எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க-வுக்கும், இந்த ஆட்சிக்கும் துரோகம் செய்துவிட்டார். அதேபோல கட்சிக்குத் துரோகம் செய்து வெளியே சென்ற ஓ.பன்னீர்செல்வத்தைக் கூட்டணி சேர்த்துக்கொண்டு, அவர்கள் இருவரும் துரோகமும், குரோதமும் கொண்டு செல்பட்டு வருகின்றனர். தன்னை முதல்வராக்கிய கட்சிக்கே துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி, மக்களுக்கு எப்படி நல்லது செல்வார்? அதனால்தான், எங்கள் எம்.எல்.ஏ-க்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால், ‘இது உள்கட்சி பிரச்சனை’ என்று கவர்னர் கூறுவதற்கான காரணம் அனைவருக்கும் தெரியும். காலதாமதம் செய்தால் எம்.எல்.ஏ-க்கள் மனம் மாறி. தானாக இந்தப் பிரச்னையை விட்டுவிட்டு வெளியேறி விடுவார்கள் என்று நினைக்கின்றனர்.

தங்களின் சுயலாபத்துக்காக எம்.எல்.ஏ-க்கள் இங்கு தங்கியிருக்கவில்லை. கட்சியைக் காப்பாற்ற வேண்டும், துரோகத்தை ஒழித்து ஒரு நல்ல தலைமையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் தங்கள் குடும்பத்தையும், தொகுதியையும் விட்டு, இங்கே வந்து தங்கி உள்ளனர். அதனால்தான் அனைவரும் ஒற்றுமையாக இவ்வளவு நாட்கள் தங்கியிருக்கின்றனர். அவர்களை யாரும் இங்கே அடைத்து வைக்கவில்லை. எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருப்பதால் சமாதானம் செய்வதற்காக நான் இங்கு வந்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், அதற்காக வரவில்லை. தினமும் அவர்களுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். மதுரை மேலுர் பொதுக்கூட்டத்தில் இங்குள்ள அனைவரும் கலந்து கொண்டனர். எங்களுக்கு எதிராக நான்கு எம்.எல்.ஏ-க்கள்தான் இருக்கிறார்கள் என அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். அவர்களையும் பாதாளம்வரை சென்று சரி செய்துவிட்டதாக கேலி செய்கின்றனர். இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருப்போம். இல்லை என்றால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம். என்ன நடவடிக்கை என்பது பற்றி தற்போது சொல்ல முடியாது. ஜெயந்தி, உமா மகேஸ்வரி இரு எம்.எல்.ஏ-க்களும் சொந்த ஊர் சென்றுள்ளனர்.

வெற்றிவேல் எம்.எல்.ஏ. சென்னையில் இருக்கிறார். அதே போன்று சுந்தர்ராஜ், அவரின் வீட்டு கிரகப் பிரவேசத்துக்குச் சென்றுள்ளார். தொகுதி மக்களைச் சந்திக்க முடியவில்லை என்ற ஒரே ஒரு குறைதான் எம்.எல்.ஏ-க்களிடம் உள்ளது. ஓரிரு நாட்களில் நிச்சயம் விடிவு பிறக்கும். குடியரசுத் தலைவரைச் சந்திக்க அனுமதி கேட்கவில்லை. நாங்கள் அவரைச் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.

பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி

'நீட்' விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும் பதவி விலகினால் போதாதது; முதல்வர், துணை முதல்வர் ஆகியோரும் பதவி விலக வேண்டும். அவர்கள் விலகினாலே மற்ற அனைத்தையும் நாங்கள் சரி செய்துவிடுவோம். மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்திருந்தால், அவருக்கு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்திருக்கும். இந்தியா முழுவதும் நீட் என்ற பெயரில் தேர்வு நடத்தப்படும்போது, தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தை சார்ந்து நீட் தேர்வு இருந்திருந்தால் அனிதாவுக்கு இடம் கிடைத்திருக்கும். நீட் தேர்வு என்பது தமிழகத்துக்கு தேவை இல்லை. கடந்த காலங்களில் இங்கே மருத்துவம் படித்தவர்கள் எல்லாம். உலக அளவில் புகழ்பெற்று இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் மூலம் நீட் தேர்வில் கேள்விகள் கேட்பது குறித்து உச்ச நீதிமன்றம்கூட கேள்வி எழுப்பி இருந்தது. தமிழக மக்கள் என்றைக்கும் தாங்கள் விரும்பாத திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழக மக்கள் தாங்களாக விரும்பி ஏற்பார்களே தவிர, திணிப்பை புறக்கணிப்பார்கள். குறைந்தபட்சம் மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள கேள்விகளாக தயாரித்தாவது நீட் தேர்வை நடத்த வேண்டும். அப்படி நடந்திருந்தால் அனிதா போன்ற அகால மரணங்கள் நடந்திருக்காது.

வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் தேவை என்ன, கோரிக்கை என்ன என்பதை மத்திய அரசு உணர்ந்து, மாநில பாடத்திட்டத்தின் கீழ் நீட் தேர்வு வினாத்தாள்களை தயார் செய்ய வேண்டும். அப்போதுதான் அனிதா போன்ற ஏழை, எளிய மாணவர்களால் அந்தத் தேர்வை எதிர்கொண்டு, மருத்துவப் படிப்பில் சேர்ந்து உயர் கல்வி கற்க முடியும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி மற்றும் 69 சதவிகித இடஒதுக்கீடு, தமிழகத்தில் நிலுவையில் இருக்கும்போது இதுபோன்ற விபரீத சம்பவங்கள் எல்லாம் நடைபெறுகிறது" என்றார்.

மேலும், தினகரனிடம், "எடப்பாடி தரப்பில் இருந்து சமாதானத்துக்கு வந்தால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "எடப்பாடி பற்றிப் பேச வேண்டிய நேரம் இதுவல்ல; அவர் வீட்டுக்குப் போகவேண்டிய நேரம் இது. அதேபோல அவர்கள் கூட்டுவது பொதுக்குழுவே இல்லை. அது ஒரு நான்கு பேர் நடத்துகிற கூட்டம்" என்று பதிலளித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement