Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதாவுக்கு நீதி கோரி திருச்சியில் தொடர் உண்ணாவிரதம்!

திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் அனைத்திந்திய மாணவர் மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவைச் சேர்ந்த தினேஷ், ஜீவானந்தம், சேக்அப்துல்லா, சூர்யா, ரியாத் நிஷா உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள், அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று கோரிக்கையுடனும் காலவரையற்ற உண்ணாவிரதப் போரட்டத்தைத் நேற்று காலை ஒன்பது மணிக்கு தொடங்கினர். ஆரம்பத்தில் ஐந்து பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்துக்கு இப்போது பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று கொட்டும் மழையிலும் கூட அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்

இன்று போராட்டம் நிகழும் இடத்திற்கு விரைந்து உண்ணாவிரதத்தின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் அவர்களிடம் பேசினோம். அவர் கூறியதாவது, "நாங்கள் நேற்று ஒன்பது மணியிலிருந்து  உண்ணாவிரதம் இருந்து வருகிறோம். முதலில் ஐந்து பேருடன் தான் ஆரம்பித்தோம். நேற்று இரவோடு அறுபத்து மூன்று பேர் எங்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். நேற்று எங்களைப் பற்றி வந்து செய்திகளைக் கண்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்துள்ளனர். இப்போது 120 பேர் இருக்கிறோம். இன்று காலையில் மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் சென்று உண்ணாவிரதத்துக்கான அழைப்பை விடுத்தோம். ஆனால், அவர்களோ  உங்களுடன் உண்ணாவிரதப் பேராட்டத்தில் ஈடுபட்டால் கல்லூரி நிர்வாகம் எங்களது மதிப்பெண்ணில் கை வைத்து விடுவார்கள் என்று சொல்லி நழுவி விட்டனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மாணவர்களும் பல்வேறு துறைகளில் இருந்து அவர்களுக்காக வந்திருக்கிறோம். ஆனால், சம்பந்தப்பட்ட அவர்களோ எங்களுடன் இணைய மறுத்து விட்டனர். எப்பொழுதும் போராடுபவர்கள்தான் போராடுகிறார்கள். மற்றபடி யாரும் வருவதில்லை.

நாளை, மாணவர்கள் அதிகம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அனிதாவை போல் இனி ஒரு மாணவரோ மாணவியோ பாதிக்கபடக் கூடாது. அனிதா மரணத்துக்கு நீதி கேட்பது மட்டுமல்லாமல், மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்காகவாது மாணவர்கள் போராட வர வேண்டும். நேற்று ஐந்து பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினோம். இன்று புதியதாக முகேஷ் என்பவர் இணைந்துள்ளார். மொத்தம், ஆறு பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோம்.  நாளை மாலை கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம். "COME FORWARD MEDICAL STUDENTS" என்ற வாசகத்தையும் நாளை முன்னிறுத்த உள்ளோம்.  நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அனிதாவின் தற்கொலைக்கு விசாரணைக்குழு அமைக்கவும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கல்வியை மத்திய அரசின் பட்டியலிலிருந்து, மாநில அரசுக்கு மாற்ற வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசுக்கு இணைங்கிப் போவதை நிறுத்திவிட்டு இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கி மாணவர்களின் நலனைக் காக்க வேண்டும். எங்களுக்கு இப்போது மாணவர்களும் குறிப்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இதர மாணவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்பது உட்பட எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்" எனக் கூறினார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement