'அடுத்த தலைமுறைக்கு சினிமாவைவிட அரசியலைக் கற்றுத் தர வேண்டும்!' - விஜய்சேதுபதி | We should teach politics over cinema to the next generation, says Vijay Setupathi

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (04/09/2017)

கடைசி தொடர்பு:10:05 (04/09/2017)

'அடுத்த தலைமுறைக்கு சினிமாவைவிட அரசியலைக் கற்றுத் தர வேண்டும்!' - விஜய்சேதுபதி

வறுமைவென்று தலைநிமிர்ந்து மருத்துவராக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்ட மாணவி அனிதா. 'நீட்' பிரச்னையால் தற்கொலை முடிவை எடுத்த, அனிதாவின் மரணம் பலரையும் பாதித்தது. அதிர்ச்சியடைய வைத்தது. இதற்காக சென்னை லயோலா கல்லூரியில் மாணவி அனிதா நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அதில், இயக்குநர் பா.ரஞ்சித், விஜய் சேதுபதி, தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தார்கள்.

விஜய்சேதுபதி

அப்போது பேசிய விஜய் சேதுபதி, 'கல்வி என்பது அடிப்படைத் தேவை. அதுக்காக நாம ஓர் உயிரை இழந்துட்டு வருத்தப்பட்டுக்கிட்டு  இருக்கோம். இப்ப இந்த இழப்பை நாம சர்ச்சைனு பேசிக்கிட்டு இருக்கோம். நம்ம மேல தொடர்ந்து ஓர் அரசியல் வைக்கப்பட்டுக்கிட்டே இருக்கு. அதுதான் சாதி. இந்த இடத்துல இருந்துதான் நம்மை பிரிக்க ஆரம்பிக்கிறாங்க. அதை முதலில் ஒழிக்கணும். இப்ப நாம போராடுறோம். போறாடுபவர்களைச் சமாளிக்கிறவங்க நிறைய பேர் வளர்ந்துட்டாங்க. அதனால போராடும் முறையிலும் நாம மாற்றம் கொண்டு வரணும்னு நினைக்கிறேன். நாம ஒரே இடத்துல உட்கார்ந்து; ஒரே இடத்துல கூடி பேசினா அதை சுலபமா கலைச்சுடறாங்க. அதனால் இனி வரும் தலைவர்கள் இந்தப் போராட்டங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக என்னவெல்லாம் செய்யலாம் என்பதை யோசிக்கலாம். அதே மாதிரி நம்ம தலைமுறையினருக்கு அரசியல் பற்றிய அறிவை நிறைய ஊட்டணும்னு ஆசைப்படுறேன். அடுத்த தலைமுறையினருக்கு சினிமாவை விட அரசியல் கற்றுத் தரணும். அதுதான் முக்கியம். சாதி மட்டும்தான் இந்தச் சமுதாயத்தைப் பிரிச்சு வைக்கிறது. நம்மைப் போராட தயங்க வைக்குதுனு நான் நினைக்கிறேன். அதை நாமதான் உடைச்சு எரியணும்'' என்றார்.