வெளியிடப்பட்ட நேரம்: 15:34 (04/09/2017)

கடைசி தொடர்பு:15:34 (04/09/2017)

நீட் விலக்குக்காக நீளும் மாணவர்களின் போராட்டம் - கொந்தளிப்பில் கடலூர்

ரியலூர் மாணவி அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் போராட்டத்தை முறியடிக்கும் வழிதெரியாமல் ஆட்சியாளர்கள் திணறி வருகின்றனர். 


    

அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவப் படிப்பை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரம் பேர் வரையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடக்கும் இந்தப் போராட்டத்தில், ' அனிதா சாவுக்குக் காரணம் மத்திய, மாநில அரசுகள்தான்' எனக் குற்றம் சாட்டி கோஷம் எழுப்பினர். பின்னர் பூமா கோவிலில் இருந்து பல்கலைக்கழகம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தினர். இதனால் அப்பகுதி பதற்றமாகக் காணப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அதேபோல், சிதம்பரம் கலைக் கல்லூரி, ராகவேந்திரா கல்லூரி, கடலூர் கலைக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தினர்.